குழந்தைகளைப் புரிந்துகொள்ளுங்கள்!

7/24/2019 4:58:01 PM

குழந்தைகளைப் புரிந்துகொள்ளுங்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

குழந்தைகளின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான தருணம் அது பேச ஆரம்பிக்கும் காலமாகும். குழந்தையின் ஓரிரு வார்த்தையினை மழலையாக பேசும் தருணத்தில் பெற்றோர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. சிறிது சிறிதாக குழந்தை குடும்பமொழியில் பேசுகிறது. நாளடைவில் அம்மொழி குழந்தையின் கருத்துப் பரிமாற்றக் கருவியாக மாறிவிடுகிறது. இதன் மூலம் குழந்தை சிந்திப்பதற்கும், உணர்வதற்கும், சூழலுக்கேற்ப  செயல்படுவதற்கும் மொழியினைப் பயன்படுத்துகிறது.

குழந்தையின் ஆளுமையை, திறன்களை வளர்த்தெடுப்பதில் குழந்தையின் மொழி முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால்தான் குழந்தைகளுடன்  பழகுவோர் மற்றும் ஆசிரியர்கள் மொழியை மேலும் விரிவாக பார்க்க வேண்டியது முக்கியமாகிறது.மொழியைப் பொறுத்தவரை பள்ளியாசிரியரின் பங்கு  குழந்தைக்கு பலவித அனுபவங்களை ஏற்படுத்தித் தருவதாக இருக்கவேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த மொழியினை அவர் புதியதாகக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஏற்கனவே பயன்படுத்தும்  விதத்தைச் சீரமைத்து குழந்தை முழு ஆளுமை பெறுவதற்கு உதவுவதே ஆசிரியரின் பணியாகும். இதன் மூலம் கற்றல் ஏற்படுவதற்கு மொழி அவசியம்  தேவையென நம்மால் உணரமுடியும்.

‘‘கற்றல் என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தைக் குறிக்கிறது’’ என்கிறார் உளவியலாளர் ‘எரிக். எரிக்சன்’. இதன் மூலம் கற்றலின் வழியாக நடத்தை மாற்றம் ஏற்படுகிறது. இந்நடத்தை மாற்றம்  ஒருவரது கவனித்தல் மூலமாக பெறும் பயிற்சி மற்றும் அனுபவங்களைக் காரணியாகக் கொண்டுள்ளது.

ஒருவரது நடத்தையில் ஏற்படும் மாற்றம் ஓரளவு நிலையானதாக இருந்தால் மட்டுமே அது கற்றலின் பயனாக அமைகிறது. இது தவிர, தேர்விற்காக படித்து தயார் செய்து, தேர்வு முடிந்த பின்பு மறந்து விடும் நிலையில் கற்றல் என்பது நடைபெறவில்லை என்பதை உணரலாம். சுவாசித்தல், உணவு  பெறுதல், உதைத்தல், தவழுதல், உச்சரித்தல், பேசுதல் போன்ற இயல்பூக்கங்கள் குழந்தைகளின் கற்றலில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இதன் காரணமாக தனது சுற்றுச்சூழலைக் கையாள்வதில் தொடங்கி உற்று நோக்குதல், கவனித்தல், ஒப்பிட்டுப் பார்த்தல், மனதில் நிறுத்தி, பரிசீலித்தல்,  முடிவுக்கு வருதல் போன்ற கற்றலின் மேம்பட்ட நடத்தை மாற்றத்தைக் குழந்தைகள் பெறுகின்றன.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குழந்தை தனித்து சுய சார்புடையதாக மாறுவதற்கு கற்றல் உறுதுணையாக இருக்கிறது. எனவே, கற்றல்  என்பது வகுப்பறையில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல.கற்றல் மனித இயல்புகளில் ஒன்று. இதில் பின்வரும் இயல்புகள் உள்ளதென ‘தாம்மைக்’  என்னும் கல்வியாளர் கூறியுள்ளார்.

1. கற்றல் உயிருள்ள அனைத்திற்கும் பொதுவானது.
2. கற்றல் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் ஒரு ெதாடர் நிகழ்வு.
3. கற்றலால் நடத்தையில் மாற்றமுண்டாகிறது.

குழந்தை கருவில் வளரும்போதே மூளை அணுக்களிலும், மனதிலும் பதிவுகள் தொடங்கி விடுகின்றன. உண்ைமயைச் சொன்னால் குழந்தைகள்  தன்னைப்பற்றி அறியாத நிலையிலேயே கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுகின்றன. குழந்தையின் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் மூளை வளர்ச்சி  மனிதனின் மொத்த வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு வளர்ந்துவிடுகிறது.

அறிவு வளர்ச்சியும், உணர்வுப் பக்குவமும் இந்நிலையில் விரைவாக நடக்கின்றன. புது மனதில் எல்லாம் எளிதில் பதிகின்றன. எனவே, ஐம்புலன்களின்  மூலம் கோடான கோடி செய்திகள் விரைந்து கற்றலைத் தூண்டுகின்றன. இத்தருணத்தில் குடும்பம், சமூகம் சார்ந்த எதிர்மறை நிகழ்வுகள்,  வன்முறைகள் குழந்தைகள் மனதில் இடம்பெறாமல் காக்கப்பட வேண்டும்.

மலர் போன்ற மென் மனதில் கூர்வாள் போன்ற விவரங்கள் பதிவாகக் கூடாது.கற்றல் அதற்கான நோக்கினையுடையது. ஒரு குழந்தை பள்ளியிலும், வெளியிலும் கற்கக்கூடியவை அதனுடைய குறிக்கோள்கள், மனநிறைவு ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவை. நோக்கம் எதுவுமின்றி  எவராலும் எதையுமே கற்கமுடியாது.

கற்றலுக்கு பன்முக நோக்கமுள்ளது. கற்றல் என்பது பல்வேறு வகையிலான கற்றல்களின் ஒருங்கிணைப்பு என்பர். சொல் சார்ந்த கற்றல், புலன்வழிக் கற்றல், உடலியக்கக் கற்றல், கருத்தமைவுக் கற்றல், மனவெழுச்சிக் கற்றல், பிரச்சனை தீர்வு கற்றல் என உளவியலாளர்கள் கற்றலைப் பலவாறு  வகைப்படுத்தியுள்ளனர்.

கற்றல்மொழி என்றவுடன் நாம் தமிழ், ஆங்கிலம், இந்தி அல்லது பிறமொழிகள் தொடர்பான குறிப்பினை மனதில் கொள்கிறோம். ஆனால், உலகிலுள்ள  ஒவ்வொரு குழந்தையும் நமது தேவைகளை நிறைவு செய்துகொள்ள மொழியைப் பயன்படுத்துகிறது. உலகினை அறிந்துகொள்வதற்கும் மொழியையே  துணையாக ஏற்கிறது.

ஒரு குழந்தையின் வாழ்வில் மொழியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளை ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து புரிந்துகொள்வது அவசியம். இதைப்  புரிந்துகொள்ளாமல் ஒரு ஆசிரியரோ அல்லது பெற்றோரோ குழந்தையின் கல்வியின் மீதும், கற்றலின் மீதும் ஆர்வம் கொள்ள முடியாது.

எனவே, கற்றல் மொழி என்பது குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உணர வேண்டும். ஒரு குழந்தை தமது எண்ணங்களை, ஆர்வங்களை, மதிப்பீடுகளை உள்ளடக்கிய ஆளுமையை உருவாக்குவதில் மொழி முக்கிய பங்காற்றுகிறது. இதனை அனைவரும்  அறிய வேண்டும்.

குழந்தையின் ஆளுமையை மொழிதான் வடிவமைக்கிறது. மொழியின் அறிமுகம் பெற்றோரால் உருவாகிறது. மொழிச்சூழலை வளர்ப்பதில் ஆசிரியரின்  பங்கு அவசியம். குழந்தையின் மொழியினைப் புரிந்த ஆசிரியர்களால்தான் கற்றல் மொழியினைக் கவனமாகப் பயன்படுத்த முடியும். கற்றல்  மொழியினைக் கையாளும் வகுப்பறைகளில்தான் உண்மையான கற்றல் என்பது நடைபெறமுடியும்.

X