கால்நடை அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவமும் வேலை வாய்ப்புகளும்!

11/5/2019 4:50:48 PM

கால்நடை அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவமும் வேலை வாய்ப்புகளும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

விலங்குகளுக்கும் மானுட நாகரிகத்திற்கும் ஆழமான தொடர்பு உள்ளது. கால்நடைகளைப் பழக்கி தனது உணவுத்தேவை முதல் வேலைகள் வரை பல  விதங்களில் பயன்படுத்திக் கொண்டதே மானுட நாகரிகத்தின் ஆரம்பப்புள்ளி. அன்று முதல் இன்றுவரை மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும்  கால்நடைகளின் பங்கு இன்றியமையாததாகவே  உள்ளது. மனிதன் இல்லாமல் கால்நடைகளால் வாழ இயலும். ஆனால், கால்நடைகள் இல்லாமல்  மனிதனால் வாழவே முடியாது என்பது தர்க்கபூர்வ உண்மை.

இயற்கையின் உணவுச் சங்கிலி அமைப்பு மற்றும் உயிரியல் சமநிலையை நிர்மாணிப்பது விலங்குகளின் இருப்பாலே சாத்தியப்படுகிறது. உணவு,  மருந்து, விவசாயம், பொருளாதாரம் என பல தளங்களில் விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை சார்ந்துதான் மனிதன் உள்ளான். மனித  வாழ்க்கையின் அத்தனை கூறுகளிலும் கலந்துள்ள கால்நடைகளைப் பற்றிய அறிவியல் துறையே கால்நடை அறிவியல் (Veterinary Science).  வனவிலங்குகள் காப்பகம், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் சார்ந்த நவீன ஆராய்ச்சிகள், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் என மனிதர்கள்  அல்லாத மற்ற உயிர்கள் மீதும் கவனம் செலுத்தும் இன்றைய யுகத்தில் கால்நடை நிபுணர்களின்  தேவை இன்றியமையாததாக உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

ஐந்தரை ஆண்டுகள் கால அளவுடைய இளங்கலைப் படிப்பான B.V.Sc (Veterinary Science)-ல் ஓர் ஆண்டுகாலம் களத்தில் கற்கப்படும்  இண்டர்ன்ஷிப்புக்காக ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அளவுடைய முதுகலைப் படிப்பான M.V.Sc (Veterinary Science) மற்றும் கால்நடை  உட்பிரிவுகளை சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிப் பட்டமும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளாலும்  வழங்கப்பட்டுவருகிறது.

கல்வித் தகுதி

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை தேர்வு செய்து +2 முடித்திருப்பது இளங்கலை படிப்பிற்கான அடிப்படை கல்வித் தகுதியாகும்.  மாநில அரசுகளால்  நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கால்நடை அறிவியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை  நடத்தப்படும். Veterinary Council of India என்ற அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  40 கல்விநிறுவனங்களில் 15 சதவீதம் அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளங்கலை B.V.Sc படித்திருப்பது முதுகலைப் படிப்பான  M.V.Sc-க்கு அடிப்படைக் கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. அடுத்து Indian Council for Agricultural Research மற்றும் National Testing Agency  ஆகிய அமைப்புகளால் இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது முதுகலைப் படிப்பிற்கு  முக்கிய கல்வித்  தகுதியாகும்.

வேலை வாய்ப்பு

பால் உற்பத்தி, இறைச்சி, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது இந்தியா. ஆடு மாடு வளர்ப்பு என பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில்  தொடங்கி பூனை, நாய் போன்ற வீட்டுப் பிராணிகள், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் ஆராய்ச்சிகள் என பல தளங்களில் தொழில்முறைப் பயிற்சி  பெற்ற கால்நடை நிபுணர்களுக்கான தேவை உள்ளது. மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் அமைந்திருக்கும் கால்நடை மருத்துவமனைகளிலும்  பொதுத்துறை வங்கிகளில் Agricultural Field Officer/Rural Development Officer போன்ற பிரிவுகளில் என அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள்  பெருகிவருகின்றன. அதே நேரம் பின்தங்கிய இடங்களில் செயல்படும்  தனியார் வங்கிகளிலும், இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் கால்நடை அறிவியல்  படித்தவர்களின் தேவை உள்ளது. பாதுகாப்பு மற்றும் காவல் துறைகளில் நாய்களின் ஆரோக்கியத்தை பேணுவது, கல்விநிறுவனங்களில்  விரிவுரையாளர், தனியாக வளர்ப்பு பிராணிகளுக்கான கிளினிக்குகள் தொடங்குதல், இந்திய அரசு நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் என  பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன.

கல்வி நிறுவனங்கள்

மாநில மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்கள் கால்நடை அறிவியல் சார்ந்த   இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*    Bihar Animal Sciences University, Patna.
*    Sri Venkateswara Veterinary University, Tirupati.
*    Tamilnadu Veterinary & Animal Science University, Chennai.
*    West Bengal University of Animal & Fisheries Science, kolkatta.
*    Kerala Veterinary & Animal Science University,, Wayanad.
*    Kamadhenu University , Gandhinagar.
*    Assam Agricultural University, Jorhat.
*    Karnataka Veterinary, Fisheries & Animal Science, Bidar.
*    Dr. Rajendra Prasad Agricultural University, Pusa.

பால்பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவுப் பொருட்கள் பதனிடுதல்  போன்ற பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் கால்நடை அறிவியல் பயின்றவர்களின் தேவை அதிகம்  உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே பல்வேறு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வருவாயை உயர்த்தும் நோக்கில்  சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்  கல்லூரிகள்/மையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றிகரமான வாழ்வை  அமைத்துக்கொள்ளலாம்.

-வெங்கட் குருசாமி.

X