முயற்சியும் முழு ஆற்றலும் தடைகளைத் தகர்த்தெறியும்!

2/14/2020 5:32:36 PM

முயற்சியும் முழு ஆற்றலும் தடைகளைத் தகர்த்தெறியும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

நம் லட்சியம் தெளிவாக இருந்தால்தான் முயற்சிகளில் உறுதியும் வலிமையும் இருக்கும். ஆகவே, உங்களுடைய லட்சியத்தை தெளிவாக்குங்கள். அதாவது, உங்களுடைய வாழ்வில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு என்ன? என்பதை குறித்து ஆழமாகச் சிந்தித்து தெளிவான இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு அவற்றை எழுத்தில் வடித்து உங்களுடைய பார்வையில் படும்படியாக வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அவ்வாறான லட்சியத்தை அடைவதற்கான செயல்திட்டத்தையும் தீட்டிச் செயல்படுங்கள்.
 

நீங்கள் திட்டமிட்டபடி செயல்படும் போதும்கூட தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்படுவது இயற்கையே! அதற்கெல்லாம் மனம் தளர்ந்து முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டேன் என்று உறுதியாகத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனதிலும், உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்தத் தீர்மானம் ஆழமாகப் பதிந்து ரத்தத்தில் கலக்கட்டும். உங்களுடைய இதயமும் லட்சியத்தின் வெற்றியையே தனது ஓசையாக்கிக் கொண்டு இயங்கட்டும். அவ்வாறு செய்தால், ஒருபோதும் உங்களுடைய முயற்சியில் தளர்ச்சி ஏற்படாது! முன்னேற்றப் பயணத்தில் தொய்வு ஏற்படாது! உங்களுடைய திறமையின் மீதும், உங்களுடைய முயற்சியின் மீதும் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். எதைச் செய்வதாயினும் அதனை முடிக்க முடியும் என்று நீங்கள் முதலில் நம்பவேண்டும். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமாக மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்திக்காட்ட முடியும்.

அப்படி மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்தான் சாதனைப்பெண் லஷ்மி அகர்வால். லஷ்மி அகர்வால் பிறந்த நேரத்திலிருந்தே சோதனைகளோடு வாழப் பழகியவள். 1990-ல் டெல்லியில் அவள் பிறந்தபோது, பெற்றோருக்குத் தங்குவதற்கு ஒரு வீடுகூட கிடையாது. கனமழை கொட்டித் தீர்க்க, அவளது பெற்றோர் பிறந்த நான்கு நாளே ஆன பிஞ்சுக் குழந்தையுடன் அருகிலுள்ள ஒரு பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சம் புகுந்தனர். அவருடைய தாய் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். தன் மனைவியும் குழந்தையும் நனையாத விதத்தில் தானே குடையாக மாறி நின்றார் முன்னாலால். சமையல்காரரான அவர், அப்போதைய பிளாட்பார வாழ்க்கை நிலை மாறவேண்டுமெனத் தன் பேரழகு மகளுக்கு ‘லஷ்மி’என ஆசையுடன் பெயரிட்டார். அவளுக்குப் பிறகு ஒரு மகனும் பிறந்தான். வாய்க்கும் வயிற்றுக்குமான போராட்டங்களாக, வாழ்க்கை வறுமையின் பெருமைகளுடன் நகர்ந்தது.

லஷ்மிக்கு சிறுவயது முதலே தேவதைக் கதைகளில் மிகுந்த விருப்பமுண்டு. அதுவும் சிண்ட்ரெல்லா அவளது பிரியத்திற்குரியவள். தன்னையே ஒரு சிண்ட்ரெல்லாவாகத்தான் அவள் கருதிக்கொண்டாள். பதினைந்து வயதில் லஷ்மியின் மொபைலுக்கு ஒரு மெஸேஜ் வந்தது ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்று 32 வயது நபர் ஒருவர் மெஸேஜ் அனுப்புகிறார். லஷ்மிக்கு ஒரு தோழி இருந்தாள். அந்தத் தோழிக்கு ஒரு காதலன் இருந்தான். அந்த காதலனின் சகோதரன்தான் அந்த நபர். லட்சணமான லஷ்மி மீது அவனுக்கு ஒருதலைக் காதல். பல மாதங்களாக லஷ்மியைச் சுற்றிச் சுற்றி வந்து இம்சை செய்தான். அடுத்ததாக மொபைலில் காதல் தூது. ‘உடனே பதில் சொல்’என்று மறுநாளும் மெஸேஜ் வந்தது. அவனைக் கண்டாலே லஷ்மிக்குப் பிடிக்காது. அவனது தொல்லைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்றே தவித்துக் கொண்டிருந்தாள். அவள் எந்தப் பதிலும் அனுப்பவில்லை.

மூன்று நாட்கள் கழிந்து டெல்லியின் கான் மார்க்கெட் பகுதியில் லஷ்மி பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தாள். பகல் பொழுது. கூட்டம் நிறைந்த பகுதி. அதே நபர் அங்கே ஒரு பெண்ணுடன் வந்தான். லஷ்மி பயந்து நடுங்கினாள். வந்தவன் லஷ்மியை நெருங்கி அவளைத் தள்ளிவிட்டான். தான் மறைத்து வைத்திருந்த திரவம் நிறைந்த ஒரு பாட்டிலை எடுத்தான். அதைத் திறந்து, கீழே கிடந்த லஷ்மியின் முகம், கழுத்துப் பகுதியில் ஊற்றினான். இருவருமே ஓடி மறைந்தார்கள். முதலில் ஏதோ தண்ணீர் தெளித்ததுபோல் உணர்ந்த லஷ்மி, அடுத்தடுத்த நொடிகளில் எரிச்சலை உணர்ந்தாள். மகா எரிச்சல். பெரும் வலி வேதனை. கையால் தடவினால், தோள் கையோடு உரிந்துகொண்டு வந்தது. உடலெங்கும் நெருப்பு பரவியது போல தகிப்பு. கைகளால் கண்களை மூடிக்கொண்டு அலறித் துடித்தாள் லஷ்மி. யாரும் ஓடிவந்து தூக்கவில்லை. உதவி கேட்டு கதறிய சக மனுஷியைக் கண்டு பதறி, விலகித் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். வாகனங்களிலும் மக்கள் வேடிக்கை பார்த்தபடி வேகமாகக் கடந்து போயினர்.

ஒரு கார் வந்து நின்றது. மனிதாபிமானமுள்ள அதன் ஓட்டுநர் காரிலிருந்து இறங்கி லஷ்மியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். பத்து வாரங்கள் சிகிச்சைக்குப் பிறகு, சிதைந்த முகத்துடன் வீடு திரும்பினாள் லஷ்மி. அப்போதுதான் அவள் கையில் கண்ணாடி சிக்கியது. எடுத்துப் பார்த்த நொடியில்… மனது வெடித்து அழுதாள். தனது பழைய அழகு முகம் நினைவில் நிழலாடியது. ‘அழாதம்மா… நீ பழைய மாதிரி ஆயிருவ. டாக்டருங்க சொல்லியிருக்காங்க...’ என்ற பெற்றோரின் பொய்யான ஆறுதல் லஷ்மியை எந்தவிதத்திலும் தேற்றவில்லை. விகாரத்தின் விரக்தியும், வீரியமான வேதனையும் லஷ்மியைக் குத்திக் கிழித்தன. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மட்டும் சென்று வந்தாள். மற்றபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனாள்.

லஷ்மியின் தந்தை எதையும் வெளிக்காட்டாமல் மகளைத் தேற்றினார். மையம் கொண்ட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட லஷ்மி, தன் தந்தை கொடுத்த தைரியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டாள். லஷ்மியின் மனத்தில் ஓர் எண்ணம் வலுப்பெற்றது. ‘நான் மட்டுமல்ல, என்னைப் போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல் கொடுக்க வேண்டும். இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இடைப்பட்ட காலத்தில் தையல் கலை, அழகுக்கலை, கம்ப்யூட்டர் கோர்ஸ் என தன்னால் இயன்றதைக் கற்றுக்கொண்டாள். வேலை தேடியபோது, யாரும் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. பள்ளி ஒன்றில் சேர வேலை கேட்டுச் சென்றபோது, ‘பிள்ளைங்க பயப்படுவாங்க. நீ போயிரு’என்று விரட்டி விட்டார்கள். ஆனால், இனி எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயார் என்னும் அளவுக்கு லஷ்மியின் மனம் உறுதியடைந்து பக்குவப்பட்டிருந்தது.

நான் ஏன் முகத்தை மறைத்துக்கொண்டு வாழவேண்டும். இந்த முகமே இனி என் அடையாளம். இதுதான் என் போராட்டத்தை வலிமையாக்கும் ஒரே ஆயுதம். இருந்தாலும் விதி அந்தக் குடும்பத்தை விடுவதாக இல்லை. லஷ்மியின் தம்பி ராகுல், காசநோயால் பாதிக்கப்பட்டான். மகளுக்கும் மகனுக்கும் மருத்துவச் செலவுகளுக்காகவே ஓடி ஓடி உழைத்த முன்னாலால், தளர்ந்து போய் மாரடைப்பால் இறந்துபோனார். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையான தந்தையின் இழப்பு, லஷ்மியை முடக்கிப்போட்டது. ஆதரவற்றுத் தத்தளித்துக்கொண்டிருந்த லஷ்மியை, ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’என்று தோள் கொடுத்து தேற்றியது ஓர் உறவு. அவர்தான் அலோக்தீட்சத். சமூக ஆர்வலராக செயல்பட்டுக்கொண்டு Stop Acid Attacks என்ற இணையவழிப் போராட்டத்தை தொடங்கிவைத்தார். நானும் உங்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறேன் என்றார் லஷ்மி அழுத்தமாக. அந்த தைரியம் அலோக்கை கவர்ந்தது. தனது தீவிரமான செயல்பாடுகள் மூலமாக Stop Acid Attacks போராட்டங்களின் முகமாக மாறிப் போனார் லஷ்மி.

தன்னுடைய வாழ்க்கையில் திருமணமே கிடையாது என்று உறுதியாக இருந்த லஷ்மி அலோக்கை சந்தித்ததால் அந்த எண்ணம் மாறியது. லஷ்மி அழகானவள், அவளது மனம் மிகவும் அழகானது. அதுதான் எனக்கு வேண்டும் என்று அலோக் லஷ்மியை மணந்துகொண்டார். லஷ்மியின் தளராத முயற்சிகளால் Stop Acid Attacks அமைப்பின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. தன்னைப் போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வது, அவர்கள் மனம் தளராத விதத்தில் கவுன்சிலிங் கொடுப்பது, அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது என்று தன் அமைப்பின் மூலமாகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். சர்வதேச அளவில் பெண்களுக்காகப் போராடி வரும் லஷ்மியை கௌரவப்படுத்தும் விதமாக உலக அளவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அங்கீகாரமாக உலகின் தைரியமான பெண் என்ற விருதை வாஷிங்டனில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டு சர்வதேச அளவில் லஷ்மி கவிதை ஒன்றை வாசித்து முடிக்க, அனைவரும் கண்கலங்க எழுந்து நின்று கைதட்டினார்கள்.

‘நீ என் முகத்தில் அமிலத்தை ஊற்றவில்லை. என் கனவுகளில் ஊற்றிவிட்டாய். நிச்சயம் உன் இதயத்தில் இருந்தது காதல் அல்ல. அதுவும் அமிலமே. உன்னால் என் முகத்தைத்தான் சிதைக்க முடிந்தது. மீண்டெழுந்த என் புன்னகையை அல்ல’என்றன அந்த ஆழமான கவிதை வரிகள். உறுதியான மனம் தடைகளைத் தகர்த்தெறியும் வல்லமை மிக்கது என்பதை லஷ்மியின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடமாகும். உங்கள் மீதான உங்களுடைய நம்பிக்கை முழுவதுமாக இருந்தால் மட்டுமே உங்களுடைய முயற்சியும் முழுமையாக இருக்கும். அத்தகைய முயற்சியோடு முழு ஆற்றலுடன் செயல்பட்டால் எதிரில் உள்ள தடைகளை தகர்த்தெறியும் தன்னம்பிக்கையும் தைரியமும் தானாகவே உங்களை வந்து சேரும். முயன்று பாருங்கள் அப்போதுதான் உங்களால் நினைத்ததை வெல்ல முடியும்.

(புதுவாழ்வு மலரும்)

X