பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்

3/5/2020 3:30:30 PM

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

அன்புக் குழந்தைகளே தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் இதையும் படித்துவிடுங்கள். நீங்கள் எவ்வளவு நன்றாகப் படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் விடைத்தாள்களே எடுத்துக்காட்டி விடும். எனவே, நன்றாகப் படிப்பதைவிடவும் தேர்வில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அது மிகச்சிறந்த கலை. அக் கலையை ஒருசில மாணவர்களே கற்று வைத்துள்ளனர். நீங்களும் அக்கலையைக் கற்றுக்கொண் டால் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளலாம். எந்தத் தேர்வாக இருந்தாலும் முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடைஎழுதுவதே சிறந்த முறை. தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களைப் பகுத்துக்கொண்டு விடை எழுதினால் பதற்றத்தைக் குறைக்கலாம். பத்து மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதி மதிப்பெண்களை ஈட்டி வைத்துக்கொண்டால் நம்மை அறியாமலேயே ஒரு தெம்பு வந்துவிடும்.

அதன் பிறகு ஐந்து மதிப்பெண் வினாக்கள், அடுத்து இரண்டு மதிப்பெண் வினாக்கள், கடைசியாக ஒரு மதிப்பெண் என்று மாற்றி எழுதுவதும் ஒரு யுக்திதான். சிலர் வினாத்தாளில் உள்ளபடி முதலில் ஒரு மதிப்பெண்ணிலிருந்து தொடங்குவார்கள். அது கடைசிநேரப் பதற்றத்திற்கு வித்திட்டுவிடும். மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வினாத்தாள் படிப்பதற்கு எனக் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாணவர்கள் அந்த நேரத்தையும் தேர்வு எழுதுவதற்கே பயன்படுத்திக்கொண்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர். அது தவறான நினைப்பு.

அப்படி செய்தால் மதிப்பெண்கள் கூடுவதற்குப் பதிலாகக் குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. வினாக்களில் உள்ள லாஜிக்கை புரிந்துகொள்ள நிதானமாக வினாக்களை ஒரு முறை படிப்பது அவசியம். எனவே, அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிதானமாக வினாத்தாளைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் பிறகு விடை எழுதத் தொடங்குங்கள். விடைத்தாளைக் கையாளும் முறைகள்விடைத்தாளை கசங்காமல் அழுக்காகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கறுப்பு நீலம் ஆகிய இரு வண்ணப் பேனாக்களை மட்டும் பயன்படுத்துங்கள். விடைகளுக்கிடையே போதிய இடைவெளி விடுங்கள். ஒரு வினாவுக்கான விடை முடியும்போது பென்சிலால் கோடிட்டுக் காட்டலாம். நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுங்கள். பொதுவானவை தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் சரியாக உள்ளனவா என முதல்நாள் சோதித்துக்கொள்ளுங்கள்.

தேர்வறையில் மற்றவர்களிடம் கருவிகளைக் கடன் கேட்காதீர்கள். கவராயம் தளர்வாக இல்லாமலிருந்தால் மட்டுமே வட்டங்கள், வட்டவில்கள் ஆகியவற்றைச் சரியாக வரைய முடியும். எனவே, அதனைச் சோதித்து சரிசெய்யுங்கள். வடிவியல் வரைபடம் ஆகியவற்றை வரையும்போது அழிப்பானைப் பயன்படுத்தாமல் வரைக. அழித்து மீண்டும் வரைவது திருத்துபவர்களை எரிச்சலடையச் செய்யும். அதனால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. அறிவியல் போன்ற பாடங்களில் தேவைப்படும் இடங்களில் படங்களை அழகாக வரைந்திடுங்கள். ஆங்கிலத்தில் கேட்கப்படும் விளம்பரம் தொடர்பான வினாவுக்கும் பொருத்தமான படத்தினை வரைந்து பார்டர் கோடுகளை மறக்காமல் வரையுங்கள். அதற்கும் தனியாக மதிப்பெண் உண்டு. சில கேள்விகளுக்கு முழு விடையும் தெரியவில்லை எனில் சொற்குறிப்புகளால் சுருக்கமாக எழுதினாலும் குறைவான அளவிலாவது மதிப்பெண்கள் கிடைக்கும்.

உடல்நலம்

தேர்வுக் காலத்தில் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தேர்வுக்கு நன்றாகப் படிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியமானது தேர்வுக்கால உணவுமுறை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல்நலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாகத் தயாராகமுடியும். நம் முழுக் கவனத்தையும் படிப்பில் செலுத்திட நமக்குத் தகுதியான உடல்நிலை முக்கியம். நம் உடல்நிலையைத் தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையானது நாம் உண்ணும் உணவு ஆகும்.

கோடைக்கேற்ற உணவுகள்

ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை நீர் குடிப்பது கோடையில் அவசியம். இளநீர், மோர், நீராகாரம் போன்ற நீருணவுகளை அவசியம் குடிப்பது கோடைக்கு ஏற்றது. நம் ஊரில் விளையும் சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை உரிய முறையில் சமைத்து உண்ணலாம். உள்ளூரில் கிடைக்கும் எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து நீரில் கலந்து குடிப்பது எக்காலத்துக்கும் ஏற்றது. அதிலும் கோடைக்கு மிகவும் ஏற்றது. தேர்வுக் காலத்தில் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது படிப்பில் கவனத்தைக் கூட்டும். எனவே, எளிதில் எங்கும் கிடைக்கும் முருங்கைக் கீரையைத் தேவையான அளவு தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுகளை

வெவ்வேறு வகையில் பெற்றோர் சமைத்துக்கொடுப்பது அவசியம். ஒரே மாதிரி சமைக்காமல் ஒரு நாள் கீரையைத் துவட்டியும் இன்னொரு நாள் பருப்போடு சேர்த்து சமைத்தும் மற்றொரு நாள் வாழைப்பூவோடு சேர்த்தோ தேங்காய் சேர்த்தோ சமைப்பதுச் சலிப்பின்றி சாப்பிட ஏதுவாக இருக்கும்.தினம் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். நம் மக்கள் பழம் என்றாலே ஆப்பிள் ,ஆரஞ்சு, மாதுளை போன்ற விலை உயர்ந்த பழங்களை மட்டும்தான் நினைக்கின்றனர். நகரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்கள் அதை உண்டால் நாம், நம் ஊரில் அதிலும் நம் தோட்டத்தில் கிடைக்கும் எளிய பழங்களை உண்பதே போதும். வாழைப்பழம், கொய்யா, நுணா பொன்ற எளிய பழங்களே போதும். அதிலும் நுணாப்பழம் உண்பது இன்று கிராமத்து மாணவர்களிடம் கூட இழிவானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அதைச் சாறாக்கி நோனி ஜூஸ் என்று பாட்டிலில் அடைத்து விற்றால் அதை வாங்கிக் குடிப்பது நாகரிகமானது என்கிற மனப்போக்கு நம்மிடம் ஏற்பட்டுள்ளது.

தவிர்க்கவேண்டிய உணவுகள்

குளிர்பானங்களை அவசியம் தவிர்க்கவேண்டும். அதற்குப் பதில் பழங்களை சாறுபிழிந்து கொடுக்கலாம். அதை விட பழங்களை அப்படியே உண்பதே சிறந்தது. அசைவ உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளைக் கட்டாயம் தேர்வு நேரத்தில் தவிர்க்கவேண்டும். பள்ளிக்கு அருகிலோ தெருவிலோ திறந்த வெளியில் விற்கும் உணவுப்பொருள்களை வாங்கி உண்ணாமலிருப்பது நல்லது.பீசா, நூடுல்ஸ், ஃப்ரைடுரைஸ் ஆகிய விரைவு உணவு வகைகளையும் தேர்வுக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் தவிர்க்கவேண்டும்.  மிகுந்த காரம், மிகை இனிப்பு ஆகிய சுவையுள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

உடல் உழைப்பை விடவும் மூளை உழைப்பு கடினமானது.மாணவர்கள் தேர்வுக்கு கண் விழித்துப் படிப்பதனால் உடல் மிகுந்த சோர்வடைவதோடு உடல் சூடும் அதிகரிக்கும். எனவே, தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது தெம்பு அளிக்கும் வகையில் தேவையான சிற்றுண்டிகளை வீட்டில் தயாரித்துக் கொடுப்பது அவசியம். நீரில், ஆவியில் வேகவைத்த எளிதில் சீரணிக்கக்கூடிய உணவுகளைக் கொடுப்பதே நல்லது. இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகள் சிறந்தவை. இரவில் பாலும் பகலில் பானகமும் ஏற்ற பானங்கள். புடலங்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டி மோரில் ஊறவைத்து தேவையான அளவு உப்பிட்டு காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே சாப்பிடக் கொடுக்கலாம். அதுபோல் வெள்ளரிக்காய், நெல்லிக்காய் போன்ற காய்களைக் கொடுப்பது உடலுக்குப் புத்துணர்வு தரும். அவல்,கடலை மிட்டாய், முளைகட்டிய பருப்புவகைகள் ஆகியவற்றை நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக உண்ணப் பழக்குவதும் பெற்றோர் கடமை.

பாசம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக உணவுகளை திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிப்பதைத் தவிர்த்து போதிய அளவு ஓய்வு எடுக்க அனுமதிக்கவேண்டும். அவர்கள் விரும்பி உண்பார்கள் என்று சாக்லேட் போன்ற அதிக கொழுப்புடைய உணவுப்பொருள்களைத் தேர்வு நேரத்தில் தவிர்க்கவேண்டும். சளி பிடிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்கும்படி சுற்றுப்புறத்தையும் உணவு உண்ணும் பாத்திரங்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வது அவசியம். மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களைக் கொடுப்பதையும் தவிர்த்தால் அவர்களுக்கு விபத்து ஏற்படாமல் காக்கலாம். உணவில் ஆறு சுவைகளும் இடம்பெறும்படி சமைத்திட வேண்டும்.மேற்சொன்ன அனைத்திலும் கவனமாக இருந்து தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

X