8ம் வகுப்பு தேறியவர்களுக்கு அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்திப் பயிற்சி

6/16/2016 9:07:54 AM

8ம் வகுப்பு தேறியவர்களுக்கு அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்திப் பயிற்சி

கோயம்புத்தூரில் செயல்படும் அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை  வழங்கிவருகிறது. அப்பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் பயிற்சி நிலையத்தில் 11 மாத காலப் பயிற்சி,  இரண்டு மாதக் குறுகிய காலப் பயிற்சி என்று இரு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 11 மாதக் கால அளவிலான பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 1.6.2016 அன்று 15 வயதுக்குக் குறையாதவராகவும், 20 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இரண்டு மாதக்  குறுகிய காலப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 17 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு, அதற்கான விண்ணப்பக் கடிதத்துடன் ரூ.10க்கான “கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், கோயம்புத்தூர்  641014” எனும் பெயரில் குறுக்குக்  கோடிட்ட இந்திய அஞ்சல் ஆணை மற்றும் ரூ. 5க்கான தபால்தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட கடிதம் போன்றவற்றை இணைத்து, ”கண்காணிப்பாளர்,  அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், அவினாசி சாலை, சிவில் ஏரோடிரோம் அஞ்சல், கோயம்புத்தூர் - 641014” எனும் முகவரிக்கு  அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மேற்காணும் அலுவலக முகவரிக்கு 27.6.2016க்குள் சென்றடையும்படி அனுப்பி  வைக்க வேண்டும்.

பயிற்சிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவ, மாணவியர் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப் பெற்றுப்  பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சிகளில் 11 மாத காலப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500 கல்வி  உதவித்தொகையாக அளிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் முகவரியில் செயல்படும் பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு நேரடியாகச்  சென்று தகவல்களைப் பெறலாம். அல்லது 0422 - 2627016, 2628324, 2627065 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- உ.தாமரைச் செல்வி

X