தொழிற்கல்வி ஏன் அவசியம்?

6/28/2016 3:59:50 PM

தொழிற்கல்வி ஏன் அவசியம்?

உழவும்  தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் என்பதை அறிவோம். இவற்றில் முன்னேற்றம் இல்லை என்றால் பின்தங்கிய நாடாகவே நாம் எப்போதும் இருப்போம். சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் கண்ட பொருளாதார முன்னேற்றங்களின் பின்னணியில் இளைஞர்கள் தொழில் துவங்க முன் வந்தது அச்சாணியாக இருந்ததை மறந்து விட முடியாது.

இன்று நமது பொருளாதாரம் பெற்று வரும் மாற்றங்கள் மிகவும் வியப்பைத் தந்தாலும் அந்த வளர்ச்சியின் குறியீடுகள் வளர்ந்து கொண்டே இருக்குமா? அல்லது புதிய இளைஞர்களின் தவறான போக்கால் வீழ்ந்து நசுங்கி விடுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளை பொய்யாக்க, மாணவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை பயிற்றுவிப்பதோடு, மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்க ேவண்டும் என்கின்றனர் பொருளாதார ஆர்வலர்கள்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘அடுத்த சில ஆண்டுகளில் 25 முதல் 35 வயதுடைய இளைஞர்கள், நமது நாட்டில் எல்லா துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கத்  தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு இளம் வயதிலேயே கலைக்கல்வியும்  தொழிற்கல்வியும் மிக அவசியத்தேவை என்பதை அனைவரும் உணரவேண்டும். அதற்குரிய வகையில் அவர்களை தயார்படுத்தி, ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களை கொண்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

தொழில் துவங்கும்போது, தொழிலாளர்களை மதித்து செயல்படுவதையும் ஏட்டுக் கல்வியில் சொல்லிக் கொடுக்க வேண்டிய தருணம் இது. நிர்வாகவியல் பற்றிய கல்வியையும் உயர் கல்வியுடன் இளைஞர்களை சென்றடைய செய்தாக வேண்டும். புதிய தொழில் துவங்கும் அதாவது Start ups துவங்க வரும் இளைஞர்களுக்கு உதவ பிரத்யேக நிதியை தர சட்ட திட்டங்களை செபி வரையறை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி பங்கு வெளியீடு செய்தும் கூட நிதி பெற வசதிகள் வரத்தான் போகிறது.

அப்படிப்பட்ட புதிய பொருளாதார சூழ்நிலையில் மாதச் சம்பளம் போதும் என்ற மனப்பான்மையை மாற்றி சுயதொழில் துவங்க தயாராக இருக்கும் இளைஞர்களை உருவாக்க பள்ளிக்கல்வியிலும்  மேல் படிப்பிலும் பாடங்கள் இருக்கவேண்டும். அப்போது புதிய தொழில் முனைவோர் உருவாகி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பது மறுக்க முடியாத உண்மை’’ என்கின்றனர்.

X