தொழில் வணிகத்துறை வழங்கும் தொழிற்பயிற்சிகள்

10/21/2016 2:40:58 PM

தொழில் வணிகத்துறை வழங்கும் தொழிற்பயிற்சிகள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தகவல் பலகை

மாணவர்களும் தொழில்முனைவோரும் பயன் பெறலாம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும்தான் தொழிற்பயிற்சியை அளிக்கின்றன என பலரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு தொழில் வணிகத்துறையும் தொழில் முனவோருக்கும், மாணவர்களுக்கும் பலவித தொழிற்ப்யிற்சிகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிவருகின்றது.

இதன் மூலம் வாகன உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சிறப்பு உற்பத்தி தொழில் பிரிவுகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற கொள்கையின்படி பின்வரும் தொழிற் பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

1. மின் மற்றும் மின்னணுப் பொருட்கள், 2. தோல் மற்றும் தோல் பொருட்கள், 3. வாகன உதிரிப் பாகங்கள், 4. மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள், 5. சூரியசக்தி பயன்பாட்டு உபகரணங்கள், 6. ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள், 7. மாசுக்கட்டுப்பாடு உபகரணங்கள், 8. விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள், 9. சிக்கனப் கட்டுமானப் பொருட்கள், 10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, 11. உணவு பதப்படுத்துதல், 12. பிளாஸ்டிக் மற்றும் ரப்பர்.

தொழில் மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் அனுமதி மற்றும் மானியம் வழங்குதல், தொழிற்சாலைகள் ஒதுக்கீடு செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், தொழிலாளர்களுக்குத் தேவையான தளவாடங்களை வழங்குதல் போன்ற முக்கியப் பணிகளை செய்துவருகின்றன.தமிழ்நாடு தொழில் வணிகத் துறை கீழ்க்கண்ட இடங்களில் சிறப்புத் தொழிற்பயிற்சி மையங்களை நிறுவி மாணவர்கள்/தொழில்முனைவோருக்கு உதவி வருகிறது.

1. அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையம், தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32. இங்கு 3 ஆண்டுக் கால இயந்திரவியல் (கருவி/அச்சு, இயந்திரவியல் (குளிர்சாதனம்/காற்றுப்பதனம்) ஆகிய டிப்ளமோ படிப்புகள் 100 பேருக்கு (ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது.

2. கருவிப் பொறியியல் பயிலகம், திண்டுக்கல்  - 624003,  இங்கு 3 ஆண்டு கால இயந்திரவியல் (டூல் அண்ட் டை) பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் படிப்புக்கு, தமிழக அரசின் விதிமுறைகளின்படி கல்விக் கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

3. பீங்கான் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம். இங்கு மூன்றரை ஆண்டுக் கால பீங்கான் தொழில்நுட்பவியல் பயிற்சியை ஒவ்வொரு ஆண்டும் 60 பேருக்குக் கற்றுத் தருகின்றனர்.

4. அரசு அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், விமான
நிலையம் அஞ்சல், கோவை-14.

இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் அறிவியல் கண்ணாடி உபகரணங்கள் உற்பத்தி செய்ய அறிவியல் கண்ணாடிக் கருவிகள் தயாரிப்பதில் 2 மாதம் மற்றும் 11 மாதம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் இங்கு வேளாண்துறை, தடயவியல் துறை போன்ற பரிசோதனைக் கூடங்களுக்குத் தேவையான அறிவியல் கண்ணாடி உபகரணங்களையும் தயாரித்து அளிக்கிறது. தொழில்முனைவோர் ஆலோசனையும் பெறலாம்.

தொழில் வணிகத் துறை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அந்தந்த அலுவலகத்திலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்கள் மூலமும் பல தரமான தொழிற்பயிற்சிகளை அளிக்கின்றனர்.

X