உதவித்தொகையுடன் கைத்தறி தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு!

6/6/2017 12:55:19 PM

உதவித்தொகையுடன் கைத்தறி தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தொழில்நுட்ப பயிற்சி

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Handloom Technology (IIHT), கைத்தறித் தொழில் மேம்பாட்டிற்கான தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் ஐந்து மத்திய அரசாலும், நான்கு மாநில அரசுகளாலும் நடத்தப்படுகின்றன.

இவை தன்னாட்சி பெற்ற பொதுத்துறைக் கல்வி நிலையங்களாகும். அனைத்துத் தொழில் நுட்பக்கழகங்களிலும் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் உள்ளன. இந்த கைத்தறி மற்றும் துணிநூல் தொழில்நுட்பப் பட்டயப் படிப்பில் (Diploma in Handloom Technology) முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வித்தகுதி: இந்தப் பட்டயப்படிப்பில் முதலாமாண்டில் சேர்க்கை பெறுவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி./10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பதாரரின் வயது 1.7.2017 அன்று பொதுப் பிரிவினர் 15-23 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 15-25 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

இட ஒதுக்கீடு: தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும். மேலும், மாநிலத்திற்கான மொத்த இட ஒதுக்கீட்டில் கைத்தறி நெசவாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள், மரபு வழியாக நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லது நெசவுத்தொழில் செய்து வருபவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு 20% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் குறைவு ஏற்படின் அது நெசவுத்தொழில் சாராத பிரிவினருக்கு மாற்றம் செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் இடங்கள்: தமிழகத் தகுதிப் பட்டியலிலிருந்து ஆந்திரப்பிரதேச மாநிலம் வெங்கடகிரியிலிருக்கும் எஸ்.பி.கே.எம். இந்தியக் கைத்தறித் தொழில்நுட்பப் பயிலகம் - 4 இடங்கள், கர்நாடகா மாநிலம், கடாக்கிலிருக்கும் கர்நாடகா கைத்தறித் தொழில்நுட்பப் பயிலகம் - 8 இடங்கள், கேரள மாநிலம், கண்ணனூரிலிருக்கும் இந்தியக் கைத்தறித் தொழில்நுட்பப் பயிலகம் - 5 இடங்கள் என மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
உதவித்தொகை: இப்பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பயிலகத்தின் பங்குத்தொகை 50%, தமிழ்நாடு அரசின் பங்குத்தொகை 50%, என கணக்கிடப்பட்டு உதவித்தொகையாக முதலாமாண்டில் மாதம் ஒன்றிற்கு ரூ.1000, இரண்டாமாண்டில் மாதம் ஒன்றிற்கு ரூ.1100, மூன்றாமாண்டில் மாதம் ஒன்றிற்கு ரூ.1200 என கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், “கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், இரண்டாம் தளம், சென்னை  600 108” எனும் முகவரிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் ரூ.5க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஒன்றை வேண்டுதல் கடிதத்துடன் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். நிரப்ப்பப்பட்ட விண்ணப்பங்கள் மேற்காணும் அலுவலக முகவரிக்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 10.6.2017.

மேலும் விவரங்களை அறிய, மேற்காணும் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி

X