கொட்டிக்கிடக்கும் தொழிற்கல்வி வாய்ப்புகள்!

7/3/2017 3:25:36 PM

கொட்டிக்கிடக்கும் தொழிற்கல்வி வாய்ப்புகள்!

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், மாணவர்கள் ஏதேனும் தங்களுக்குப் பிடித்த பாடங்களை எடுத்து பன்னிரண்டாம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்று பின் உயர்கல்விக்குச் செல்வார்கள். பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் உயர்கல்வியில் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், கால்நடை மருத்துவம் என்ற ஏதேனும் ஒரு தொழிற்கல்வியையோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பையோ மாணவர்கள் மேற்கொள்வார்கள்.

இந்தக் கல்வி வாய்ப்புகளை மதிப்பெண்கள் குறைவு, நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற இயலாமை, பொருளாதாரப் பின்னடைவு என்ற ஏதேனும் ஒரு காரணத்தால் பெற இயலாதவர்களுக்கு நிறைய தொழிற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பட்டப் படிப்புகள் தாண்டி வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள ஏதேனும் ஒரு தொழில் சார்ந்த கல்வியைப் பயில்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்பு முடித்தபின் பன்னிரண்டாம் வகுப்பிற்குச் செல்லாமல், தொழிற்கல்விக்கான பட்டயப் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். பொறியியல் படிப்புகளைப் போலவே, எண்ணற்ற தொழிற்பிரிவுகள் இப்பட்டயப்படிப்புகளில் உள்ளன. பொறியியல் பட்டயப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் ஆட்டோ மொபைல் எஞ்சினியரிங், ஆட்டோ மொபைல் டெக்னாலஜி, மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மெகாட்டிரானிக்ஸ் எஞ்சினியரிங், என்ற பிரிவுகளையும், கட்டடக்கலையை விரும்புபவர்கள் ஆர்க்கி டெக்சுரல் அசிஸ்டென்ஷிப் பிரிவையும், பெட்ரோலியம் துறையை விரும்புபவர்கள் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோலியம் எஞ்சினியரிங் படிப்புகளையும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பிளாஸ்டிக் தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம், சிமென்ட் டெக்னாலஜி, ஃபுட்வேர் டெக்னாலஜி, பிரின்டிங் டெக்னாலஜி, ரெஃப்ரிஜிரேசன், ஏர்கண்டிசனிங், சுகர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி போன்ற பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்கலாம். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றில் இதுபோன்ற தொழிற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஒருசில கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடத்தப்படுவதால் தொழிற்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. பத்தாம் வகுப்பிற்குபின் கணினியியல், டேலி, டேட்டா டெக்ஸ்ட் ப்ராசஸிங், அனிமேஷன், வெப் டிசைனிங், இவற்றைப் பயின்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

அதேபோல, நடுவண் அரசின் MSME (Micro, Small and Medium Enterprise) தரும் பயிற்சி வகுப்புகளிலும், பாரத் சமாஜின் அங்கீகாரம் பெற்ற திறன் வளர் பயிற்சிகளில் (Skill Development) சேர்ந்து தொழிற்கல்வியைப் பெறலாம். இவை தவிர அரசு அங்கீகாரம் பெற்ற ITI (Industrial Technical Institute)-யில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம்.

+2 படித்தபின் இளநிலை பட்டப்படிப்பு செல்லாமல், தொழிற்கல்வி பெற விரும்புகிறவர்கள் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் போன்ற தொழிற்கல்விகளில் சேர்ந்து பட்டயப் படிப்பை மேற்கொள்ளலாம். கணக்கியல் துறையில் பணி பெற விரும்புகிறவர்கள் ICWAI (Institute of Cost Work Accounts of India) அல்லது ACS (Associate Company Secretary) Actuarial Science, அக்கவுன்ட்ஸ் டெக்னீசியன் கோர்ஸ் ஆகியவற்றில் சேரலாம்.

திரைப்படம், ஊடகம் மற்றும் விளம்பரத் துறையில் சேர விரும்புகிறவர்கள் D.F.A (Diploma in Film Acting),  D.F.T (Diploma in Audiography), Diploma in Film & T.V. Director, Diploma in Direction & Screen play writing, Diploma in Cinematography, Diploma in Film Editing, Diploma in Film Processing போன்ற பட்டயப்படிப்புகளையும், இதழியல் பட்டயப் படிப்புகளையும் படிக்கலாம்.

இவைதவிர புகைப்படத் துறையில் மோஷன் பிக்சர் போட்டோகிராபி என்ற படிப்பையும், ஒலியியல் துறையில் சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் சவுண்ட் எஞ்சினியரிங் படிப்பையும் படிக்கலாம். டி.வி. டிப்ளமோ படிப்புகளும் நிறைய வாய்ப்புகளைத் தரும் படிப்புகளாகும். தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிலிம் டெக்னாலஜியில், டைரக்‌ஷன் அண்ட் ஸ்கிரீன் பிளே ரைட்டிங், சினி போட்டோ கிராபி, ஃபிலிம் புராசஸிங், ஃபிலிம் எடிட்டிங், சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் எஞ்சினியரிங் என்ற படிப்புகள் உள்ளன.

ஆடை வடிவமைப்புத்துறையில் ஆயத்த ஆடை அமைப்பு, அப்பேரல் மேனுஃபேக்சர் டெக்னாலஜி, அப்பேரல் மெர்கெண்டைசிங், பேட்டர்ன் கட்டிங் மாஸ்டர் கோர்ஸ், குவாலிட்டி கன்ட்ரோல் கோர்ஸ், மெஷின் மெக்கானிக் கோர்ஸ், நிட் மேனுஃபேக்சர் டெக்னாலஜி, நிட்வேர் டிசைன் போன்ற வேலைவாய்ப்பையும், சுய வேலைவாய்ப்பையும் தரும் படிப்புகளாகும்.

இவை தவிர, வேளாண்மைத் துறை, உணவு மற்றும் உணவகத் தொழில்நுட்பம், கடல்சார் துறை எனப் பல்வேறு துறைகளிலும் தொழிற்கல்வி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது மட்டுமின்றி சிப்பெட் என்று சொல்லப்படும் (CIPET- Central Institute of Plastics Engineering and Technology) நெகிழி தொழில்நுட்பப் பயிற்சி மையத்தில் பிளாஸ்டிக் எஞ்சினியரிங் பயில மத்திய மாநில அரசுகள் இலவசப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகின்றது.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகின்றது. இதற்கு மாதம் ரூ. 1500 உதவித்தொகையாக சென்னையில் வசிப்பவர்களுக்கும், ரூ. 3,000 உதவித்தொகையாக வெளி மாநிலத்தவர்களுக்கும் வழங்குகின்றது. இது பற்றிய தகவல் அறிய www.cipet.gov.in என்ற இணையதளம் சென்று பார்க்கலாம்.

இங்கே இவ்வளவு தொழிற்கல்வி படிப்பு களையும் பட்டியலிட்டதன் காரணமே மாணவர்கள் மதிப்பெண் குறைவாலும், தேர்வில் அடையும் தோல்வியாலும் துவண்டு விடத் தேவையில்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான். தொழிற்கல்வி பயின்றும் கூட வாழ்வை வளமாக்கிக்கொள்ளலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

-ஆர்.ராஜராஜன்

X