குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி!

7/3/2017 3:30:15 PM

குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி!

பெண்களுக்கு அரிய வாய்ப்பு!

பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பது உண்மைதான். ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பம் முன்னேற்றம் அடையும். அதுவும் தொழிற்பயிற்சி படித்து சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், அந்தச் சந்ததிக்கே அது வளர்ச்சிதான். பெண்களை முன்னேற்றும் வகையில் மகளிருக்கு மட்டுமான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று தமிழகத்தில் திருச்சியில் செயல்பட்டு வருகிறது.

அந்தப் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகள், தொழிற்பயிற்சிகள் குறித்து பிரின்சிபால் பொறுப்பில் உள்ள ரமேஷ் பாபு பெருமிதத்தோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “மண்டல மகளிர் தொழிற்கல்வி பயிற்சி நிலையம் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசினர் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இது தமிழ்நாட்டிலேயே பெண்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட முதல் தொழிற்பயிற்சி நிலையம். இது எல்லோராலும் சுருக்கமாக RVTI(Regional Vocational Training Institute for Women)  என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் கிராமப்புற மற்றும் நகர்ப் புறப் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறது.

இதில் மகளிருக்கான குறுகியகால மற்றும் நீண்டகாலத் தொழிற்கல்வி பயிற்சிகள் மிகவும் குறைவான கட்டணத்தில் பயிற்றுவித்து வருகிறோம்’’ என்று தொழிற்கல்விப்பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தை விவரித்தார் ரமேஷ். அவர் நமக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கமளித்தார்.

மகளிருக்கான நீண்டகால தொழிற்பயிற்சிகள் என்ன?
நீண்டகாலத் தொழிற்பயிற்சிகள் வரிசையில் மூன்று முழுநேரத்தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

1. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - (இரு வருடங்கள்) - 20 இடங்கள்.
2. இன்டீரியர் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன் (ஒரு வருடம்) - 20 இடங்கள்
3. ஃபேஷன் டிசைன் அண்ட் டெக்னாலஜி - (ஒரு வருடம்) - 16 இடங்கள்.

இந்தப் பயிற்சிகளுக்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு கிடையாது.

இந்தத் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?
நீண்டகாலப் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் தற்போது பயிலகத்தில் கொடுக்கப்பட்டுவருகிறது. கல்வி நிறுவனத்தின் www.dget.nic.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் இடஒதுக்கீட்டு
அடிப்படையில் அளிக்கப்படும் ஒவ்வொரு பயிற்சிக்கும் ரூ.150 மாதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC/ST விண்ணப்பதாரர் 50 ரூபாய் மாதக் கட்டணமாகச் செலுதினால் போதும். வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்தப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. நீண்டகால பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 21-ம் தேதி  கடைசி நாளாகும்.

வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரமாகக் கூறுங்களேன்?
பயிற்சிகள் பருவமுறையில் (Semester System) 6 மாத காலமாகப் பிரித்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்படும். ஒவ்வொரு பருவத்தின் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் தேர்ச்சியடைந்தவருக்கு மத்திய அரசின் NCVT (National Council for Vocational  Training) சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்குத்தேவையான பொருள்கள் அனைத்தும் பயிலகத்திலேயே வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?
பயிற்சி முடித்தவர்களுக்குப் பயிலகத்தின் வேலைவாய்ப்புப் பிரிவு மூலமாகத் தனியார் தொழிற்சாலைகளில் தகுந்த வேலைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.  சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் திட்ட மதிப்பீடு மற்றும் வங்கிக்கடன் குறித்த ஆலோசனைகளை வழங்கிப் வருகிறோம். மேலும் இங்கு பயிற்றுநர் பயிற்சிகளும் (Instructor Training) வழங்கிப் வருகிறோம்.

நீண்டகாலப் பயிற்சிகள் முடித்தவர்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் மற்றும் ஃபேஷன் டிசைன் அண்ட் டெக்னாலஜி பிரிவுகளில் பயிற்றுநருக்கான பயிற்சிகள் (ஆசிரியர் பயிற்சி) ஒரு வருட காலம் அளிக்கப்படுகின்றன. இப்பிரிவுகளுக்கான பயிற்சிகள் எங்கள் பயிலகத்தில் மட்டுமே உள்ளது. இதன்மூலம் அனுபவம் வாய்ந்த மகளிர் அரசு மற்றும் தனியார் ITI மற்றும்  ITC-களில் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறுகியகாலப் பயிற்சிகள் என்னென்ன?
மூன்று வகையான குறுகியகாலப் பயிற்சி கள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, ஃபேஷன் பிரிவில், பேசிக் டைலரிங், டிசைனிங் & சூயிங் ஆஃப் ஃபேன்சி சல்வார் கமீஸ், டிசைனிங் & சூயிங் ஆஃப் ஃபேன்சி சாரி பிளவுசஸ், ஹேண்ட் எம்ப்ராய்டரி நெக் டிசைன்ஸ், மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி & ஜர்தோஸி எம்ப்ராய்டரி அடிப்படை பயிற்சி, ஆரி & ஜர்தோஸி எம்ப்ராய்டரி -உயர்தரப் பயிற்சி, சாரி டாசெல்ஸ் மேக்கிங், ஃபேப்ரிக் பெயின்டிங் ஃபார் சாரி, பிளவுஸ், டெக்கரேட்டிவ் ஸ்டோன் ஒர்க் இன் பிளவுஸ் & சில்க் சாரிஸ், ஃபேஷன் ஜூவல்லரி மேக்கிங், சில்க் திரட் ஜூவல்லரி மேக்கிங், டெரகோட்டா ஜூவல்லரி மேக்கிங், சாஃப்ட் டாய்ஸ் மேக்கிங்- அடிப்படைப் பயிற்சி, சாஃப்ட் டாய்ஸ் மேக்கிங் - உயர்தரப் பயிற்சி, பனானா ஃபைபர் க்ராஃப்ட் ஒர்க், ஜுட் புராடக்ட்ஸ், ப்யூட்டி கேர் - அடிப்படைப் பயிற்சி, ப்யூட்டி கேர் - உயர்தரப் பயிற்சி, ப்ரைடல் ஃப்ளவர் டெக்கரேஷன், மெகந்தி ஆர்ட், கம்ப்யூட்டரைஸ்டு ஃபேஷன் டிசைனிங்.

இரண்டாவதாக கம்ப்யூட்டர் பிரிவில், எம்.எஸ்.ஆபீஸ், ஃபோட்டோஷாப், கோரல் டிரா, புரோகிராமிங் இன் சி. மூன்றாவதாக எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், 8051 மைக்ரோகண்ட்ரோலர் & எம்பெடட் சிஸ்டம்ஸ், எஸ்.எம்.பி.எஸ். சர்வீசிங், யு.பி.எஸ். சர்வீசிங், எலக்ட்ரிக்கல் ஒயரிங் & சால்டரிங் பிராக்டீஸ், அனலாக் எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ், 8086 மைக்ரோபுராஸசர் ஆர்க்கிடெக்ச்சர் & புரோகிராமிங்.

பேஷன் பிரிவில் 22ம், கம்ப்யூட்டர் பிரிவில் 4ம், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 9ம் என குறுகிய காலப் பயிற்சிகள் மொத்தம் 35 வகையாக அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகளுக்கு 1 வாரம், 2 வாரங்கள், 4 வாரங்கள், 8 வாரங்கள், 12 வாரங்கள் எனப் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கும் வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறுகியகால ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயிற்சிக்கும் ரூ.100 விண்ணப்பப் பதிவுக் கட்டணமாகவும் மற்றும் ஒவ்வொரு வாரப் பயிற்சிக்கும் ரூ.50 பயிற்சிக் கட்டணமாகவும் பெறப்படுகிறது. விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் மற்றும் கல்வித்தகுதிச் சான்றுகள் இணைக்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 0431-255 2515 என்ற தொலைபேசி எண்ணிலும், rvtitrichy@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X