காலணி வடிவமைப்பில் அசத்தலாம்!

7/3/2017 3:36:44 PM

காலணி வடிவமைப்பில் அசத்தலாம்!

10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

இந்தியாவின் மொத்த தோல் மற்றும் தோல்பொருட்களின் உற்பத்தியில் 55 விழுக்காடு தமிழகத்தின் மூலம்தான் ஈடுசெய்யப்படுகிறது. தோல் மற்றும் தோல்பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தமையால்தான் மத்திய அரசானது 1957ல் ‘மத்திய காலணி பயிற்சி நிலையத்தை’ (CFTI - Central Footwear Training Institute) சென்னைக் கிண்டியில் நிறுவியது.

தற்போது CFTI-யானது மத்திய அரசின் சிறுகுறு மற்றும் நடுத்தர (MSME) அமைச்சகத்தின் கீழ் ஐ.எஸ்.ஓ. உலகத் தரச்சான்றிதழ் பெற்று சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதன் இயக்குநர் கே.முரளி CFTI வழங்கும் தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் பட்டியலிட்டார்.

“இந்தப் பயிற்சி நிலையத்தில் உலகத் தரம் வாய்ந்த நவீன இயந்திரங்களைக் கொண்டு இக்காலத் தேவைக்கேற்பப் புதிய தொழில்நுட்பத்துடன் அனுபவமிக்க பயிற்சியாளர்களால் 70 சதவீதம் செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்குப் படித்த மாணவ - மாணவி

களுக்கு வளாகத் தேர்வு (Campus Interview)  மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வசதியும் செய்து தரப்படுகிறது (வெளிநாட்டு வேலைவாய்ப்பும் உள்ளடங்கியது). CFTI-ன் மூலமாக இதுவரை சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது” என்று கூறிய முரளி இந்தப் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் காலணி மற்றும் துறைசார் பயிற்சி விவரங்களையும் விளக்கிக் கூறினார்.

“இங்குக் காலணி வடிவமைப்பில் இளநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் நீண்டகாலப் பயிற்சிகள், குறுகியகாலப் பயிற்சிகள் என பலகட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தொழிற்கல்வியாக நீண்டகால மற்றும் குறுகியகாலப் படிப்புகளைச் சொல்லலாம்.

நீண்டகாலப் பயிற்சிகள்:

1. டிப்ளமோ இன்ஃபுட்வேர் மேனுஃபேக்சர் அண்ட் டிசைன் (DFMD): காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான 2 ஆண்டுகாலப் படிப்பு. 12ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி லண்டன் மான்செஸ்டரில் உள்ள லீஸ்டர் கல்லூரியின் அக்ரெடிட்டேஷன் பெற்றது. படிப்பிற்கான சான்றிதழ் லீஸ்டர் கல்லூரியின் மூலமே வழங்கப்படுகிறது என்பது இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகும். வயது வரம்பு - 17 முதல் 25 வரை. பயிற்சி தொடங்கும் மாதம் - ஆகஸ்ட்.

2. போஸ்ட் கிராஜுவேட் ஹையர் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (PGHD): காலணி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான ஒன்றரை வருடப் படிப்பு. ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் (B.A., B.Sc., B.Com., B.B.A., B.C.A., .... B.E., M.B.A..) விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பயிற்சி லண்டனில் உள்ள லீஸ்டர் கல்லூரியின் அக்ரெடிட்டேஷன் பெற்றது.

படிப்பிற்காகச் சான்றிதழை லீஸ்டர் கல்லூரியே வழங்குகிறது. ஒன்றரை மாதகாலப் பயிற்சி லண்டனில் உள்ள லீஸ்டர் கல்லூரிக்கே சென்று பயில்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படுகிறது. பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை. வயது வரம்பு - 35 வரை.

3. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி (PGDFT): காலணி தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றரை வருடப் படிப்பு. ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். PGDFT-யானது NSQF அங்கீகாரம் பெற்றது. பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - செப்டம்பர். வயதுவரம்பு - 35 வரை.

4. போஸ்ட் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜி (PDFT): காலணி தொழில்நுட்பம் சார்ந்த 1 வருட படிப்பு. ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். PDFT-யானது NSQF அங்கீகாரம் பெற்றது. பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - செப்டம்பர். வயது வரம்பு - 35 வரை.

5. சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் இன் ஃபுட்வேர் மேனுஃபேக்சரிங் டெக்னாலஜி (FMT): காலணி தயாரிப்பு தொடர்பான 1வருடப் படிப்பு. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை. வயது வரம்பு - 35 வரை.

6. சர்ட்டிஃபிகேட் இன் ஃபுட்வேர் டிசைன் அண்ட் புராடக்ட் டெவலப்மென்ட் (FDPD): காலணி வடிவமைப்பு சார்ந்த 1 வருடப் படிப்பு. 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை. வயது வரம்பு - 35 வரை.

7. கன்டென்ஸ்டு கோர்ஸ் இன் ஃபுட்வேர் டிசைன் அண்ட் புரொடக்‌ஷன் (FDP): காலணி வடிவமைப்பு சார்ந்த நடுத்தரப் பயிற்சி (6 மாதங்கள்). 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜூலை மற்றும் டிசம்பர். வயது வரம்பு - 35 வரை.

குறுகிய காலப் பயிற்சிகள்:

1. சர்ட்டிஃபிகேட் இன் ஷூ கம்ப்யூட்டர் எய்டெட் டிசைன் (CSCAD): காலணி வடிவமைப்பு சார்ந்த குறுகிய காலப் பயிற்சி (3 மாதங்கள்). 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி ஆரம்பிக்கும் மாதம் - ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர். இப்பயிற்சி NSQF அங்கீகாரம் பெற்றது. வயது வரம்பு - 35 வரை. 2. டிசைனிங் அண்ட் பேட்டர்ன் கட்டிங் (DPC). 3. ஷூ அப்பர் மேக்கிங். 4.லாஸ்டிங் ஃபுல் ஷூ மேக்கிங் அண்ட் ஃபினிஷிங். - இப்பயிற்சிகள் 3 மாத காலம் நடைபெறும். 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு - 35 வரை. 5. ஷூ அப்பர் கிளிக்கிங். 6. லெதர் ஷூட்ஸ் மேக்கிங். 7. ஷூ கேட். 8. சான்டல் அண்ட் செப்பல் மேக்கிங் - இந்தப் பயிற்சிகள் 1 மாத காலம் நடைபெறும். 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு - 35 வரை.

மத்திய அரசானது எஸ்.சி./எஸ்.டி  பிரிவு மாணவ - மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தில் முழுச்சலுகை அளித்துள்ளது. மேலும், வயது வரம்பிலும் 5 வயது தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” என்கிறார் முரளி. காலணி வடிவமைப்புப் பயிற்சி நிலையத்தின் சிறப்பம்சங்களாக அவர், “100 சதவீத வேலைவாய்ப்பு வசதி - வளாகத் தேர்வு மூலம் வழங்கப்படும். உலகத்தர நவீன இயந்திரங்களுடன் பயிற்சி வழங்கப்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்படும். NSQF(National Skills Qualification Framework)அங்கீகாரம் பெற்ற பயிற்சிகள் வழங்கப்படும்.” என்றார்.

மேலும் வேலைவாய்ப்புகளில் CFTI-ன் பங்கு குறித்து கூறும்போது, “படித்த பின்பு வேலையில்லையே என ஏங்கும் இளைஞர்களுக்கு CFTI மூலம் வழங்கப்படும் அனைத்துப் பயிற்சிகளும் ஒரு வரப்பிரசாதம். இன்றைய நிலையில் தமிழகத்தில் சுமாராக 1.5 மில்லியன் பணியாளர்கள் காலணி மற்றும் தோல்பொருட்கள் துறையில் வேலை செய்கிறார்கள். மேலும் 5 வருடங்களில் புதிதாகச் சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதற்குச் சான்றாக செய்யாறில் இயங்கும் செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் கம்பெனியை எடுத்துக்கொள்ளலாம். இங்கு மட்டும் சுமார் 25,000 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். மேலும், தோல் மற்றும் தோல்பொருட்களின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளதால் செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் கம்பெனியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய தயாரிப்பை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது.

இந்த நிறுவனத்திற்கான ஆட்கள் தேவை வரும் 2 வருடங்களுக்குச் சுமாராக 25,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. CFTI -ல் படித்த மாணவ - மாணவிகள் இந்தியா முழுவதும் உள்ள காலணி தொழிற்சாலைகளில் உயரிய பொறுப்புகளை அலங்கரித்து வருகின்றனர். பணியில் சேர மட்டும் இப்பயிற்சி அல்ல… இங்குப் பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவே பல தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

காலணித் துறையில் தொழில் தொடங்க வசதியில்லாதவர்கள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு CFTI - காமன் ஸ்பெஷாலிட்டி சர்வீசஸ் என்ற வகையில் உலகத் தரம் வாய்ந்த இயந்திரங்களைக் குறைந்த தொகை அடிப்படையில் உபயோகித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.

CFTI - கன்சல்டன்சி என்ற முறையில் பல்வேறு அரசு நிறுவனங்களுக்குக் காலணித் துறைகளுக்கான இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதிலும், புதிய தொழிற்கூடங்கள் அமைக்கவும், ஃபுட்வேரின் தரத்தை உறுதிசெய்வதிலும் சீரிய பங்காற்றி வருகிறது. CFTI சென்னையில் இயங்கிவந்தாலும் இந்தியா முழுவதிலுமிருந்து மாணவ -மாணவிகள் வந்து சேர்ந்து இங்குப் பயிற்சி பெறுகின்றனர்.

மாணவர்களுக்கான ஹாஸ்டல் வசதி உள்ளது. மாணவிகளுக்குத் தங்குவதற்கான ஏற்பாட்டை நிறுவனமே செய்து தருகிறது.” என்று பல இளைஞர்களுக்கும் வழிகாட்டும் பெருமிதத்தோடு பேசி முடித்தார் முரளி.

மேலும் விவரங்களுக்கு
இயக்குநர், மத்திய காலணி பயிற்சி நிலையம் (CFTI), No 65/1, GST ரோடு, கிண்டி,
சென்னை - 600 032, போன்:  044 22501529, 22501038,
மொபைல்: 967794 3633, 967794 3733

-திருவரசு

X