கட்டடக்கலைப் பட்டப்படிப்பு!

7/3/2017 3:39:53 PM

கட்டடக்கலைப் பட்டப்படிப்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா?

ஒவ்வொரு ஆண்டும் பி.இ. பிடெக் படிப்புகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகப்  பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல, அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள 53 ஆர்க்கிடெக்ட் கல்லூரிகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஆர்க்கிடெக் எனப்படும் இளங்கலை கட்டடக்கலை படிப்பில் 2,760 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

இதற்காக, அண்ணா பல்கலைப் பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராகக் கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பி.ஆர்க். படிப்புக்கு பிளஸ் 2 கல்வித்தகுதியுடன் ‘நேட்டா’ எனப்படும் கட்டடக்கலைத் திறனறி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், 2017-18-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள பி.ஆர்க்.

இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அகில இந்தியக் கட்டடக்கலை கவுன்சில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நடத்திய ‘நேட்டா’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் www.annauniv.edu பயன்படுத்தி ஜூலை 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://barch.tnea.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்காக உபயோகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி, செல்போன் எண் பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் அந்த இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பப்படும். எஸ்.சி/எஸ்.சி(ஏ)/எஸ்.டி. பிரிவினர் ரூ.250ம், பிற பிரிவினர் ரூ.500ம் விண்ணப்பக் கட்டணமாக இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும். மாநில அரசின் இடஒதுக்கீடு சலுகை கோருவோர் விண்ணப்பக் கட்டணத்துடன் ரூ.100 செலுத்த வேண்டும்.

பி.ஆர்க் படிப்புக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பித்தால் மட்டுமே அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பித்தலின்போது மாணவர்கள் இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரிக்கான சலுகைக்காகக் கோருபவர் என்றால் அதற்கான சான்றிதழைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  

-திருவரசு

X