படிக்காதவர்களுக்கும் தொழிற்பயிற்சி!

9/25/2017 5:36:18 PM

படிக்காதவர்களுக்கும் தொழிற்பயிற்சி!

எந்தத் தொழிற்பயிற்சியாக இருந்தாலும் சரி, வங்கிக் கடன் என்றாலும் சரி... குறைந்தது பத்தாம் வகுப்பாவது கல்வித் தகுதி கேட்பார்கள். ஆனால், ‘படிப்பே தேவையில்லை... ஆர்வம் இருந்தால் வாருங்கள்... கைத்தொழில் கற்று, கடனும் பெற்று வாழ்வில் உயருங்கள்’ என்கிறது மத்திய அரசின் மக்கள் கல்வி நிறுவனம். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், திருச்சி, மதுரை, திருவாரூர், சிவகாசி, நாகப்பட்டினம், குன்றக்குடி, ராமநாதபுரம் என 10 மாவட்டங்களில் இயங்கிவருகிறது இந்த ‘மக்கள் கல்வி நிறுவனம்’. இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி நிறுவன இயக்குநர் தங்கவேலிடம் விரிவாகப் பேசினோம்...

‘‘உழைப்போர் பல்நோக்குக் கல்வி நிறுவனம் (Shramik Vidyapeeth) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட அமைப்பு. பொருளாதாரப் பிரச்னைகளால் உண்டாகும் குற்றங் களைக் குறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது சென்னையில் 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004ம் ஆண்டு, இது ‘மக்கள் கல்வி நிறுவனம்’ (Jan Shikshan Sansthan) எனப் பெயர் மாற்றப்பட்டது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழை, எளிய, படிப்பறிவில்லாத மக்கள், பெண்கள், புறக்கணிக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், விதவைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் திறன் சார்ந்த தொழிற்கல்வி அளிப்பதே எங்கள் நோக்கம். தையற்கலை, பூ வேலைப்பாடுகளில் தொடங்கி கணினி பழுது பார்த்தல் வரை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் தொழிற்கல்வி பயிற்சிகள் அந்தந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் இங்கே பயிற்றுவிக்கப்படுகிறது.

எங்களை நாடி வரும் மக்களுக்குப் பயிற்சியளிப்பது மட்டுமல்லாமல் நாங்களே மக்களைத் தேடிச் சென்று பயிற்சி அளிப்பது எங்களின் சிறப்பம்சம்’’ என்றவர், அந்த வழிமுறையையும் விளக்கினார். ‘‘சென்னைதான் தலைமை அலுவலகம் என்றாலும், தமிழகம் முழுவதும் எங்களுக்கு களப்பணி யாளர்கள்  இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவும் எங்கள் தொடர்பில் உள்ள என்.ஜி.ஓக்கள் மூலமாகவும் தமிழகம் முழுக்க ஆய்வு செய்கிறோம்.

அதன்மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கே 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்களில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்றுபடுத்துகிறோம். பின்பு அந்தப் பகுதிகளில் உள்ள என்.ஜி.ஓ அல்லது சேவை அமைப்புகள் மூலம் பயிற்சி மையங்களை உருவாக்கி அங்கேயே அவர்களுக்குப் பயிற்சிகளை அளிக்கிறோம். குறைந்தது 20 நபர்கள் இருந்தால் போதும்... நாங்கள் தேடி வந்து பயிற்சிகளை வழங்குகிறோம்.

சென்னையில் மட்டும் தலைமை அலுவலகம் தவிர, 25 எக்ஸ்டன்ஷன் சென்டர்களில் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் எந்தத் தொழிற்பயிற்சி வழங்குவது பொருந்தும் என்பதையும் தேர்ந்தெடுத்துதான் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சுமார் 35 தொழிற்பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை 3 முதல் 6 மாத காலப் பயிற்சிகளே. தினம் இரண்டு மணிநேரமே பயிற்சி. பயிற்சி இலவசம் என்றாலும் மத்திய அரசின் சான்றிதழுக்காகக் குறைந்த கட்டணமாக 150 - 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பை முடிப்பவர்களுக்குச் கூடுதலாக, ‘வாழ்க்கைத் தரமேம்பாட்டுப் பயிற்சி’யும் இங்கே வழங்கப்படுகிறது. உதாரணமாக, ‘ஒரு டெய்லர் கஸ்டமரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... தொழில் மேம்பாட்டுக்கு என்ன மாதிரியான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்’ என்றெல்லாம் வழிகாட்டும் பயிற்சி இது. மேலும், சிறு அளவிலான வங்கிக் கடன் வாங்குவது, சுயதொழில் தொடங்குவது எனப் பல வழிகாட்டுதலை நாங்கள் பயிற்சியோடு வழங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இங்கே குறைந்தபட்சம் 3,500 பேர் பயிற்சி பெற்று கைத்தொழில் நிபுணர்களாகிறார்கள்.

மறுவாழ்வு மையங்களிலும், சிறைகளிலும், சீர்திருத்தப் பள்ளிகளிலும் கூட எங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கணினிப் பயிற்சிக்கு மட்டும்தான் பத்தாம் வகுப்பு தகுதி. மற்ற எல்லா பயிற்சிகளுக்கும் மூன்றாம் வகுப்புகூடப் போதும். எங்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று, மத்திய அரசின் சான்றிதழைப் பெறலாம். இந்தச் சான்றிதழின் உதவியோடு வங்கிக் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி வாழ்வில் வளம் பெறலாம்’’ என்றார் தங்கவேல். ‘பொன் வைக்கும் இடத்தில் பூ’ என்பது போல, கல்விக்குப் பதிலாகக் கைத்தொழிலை வைத்து நம்மை முன்னேற்றும் முயற்சி இது. பயன்படுத்திக் கொள்வோமே!

- எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

X