படித்துவிட்டு வேலை தேடுவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு!

9/25/2017 5:39:54 PM

படித்துவிட்டு வேலை தேடுவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு!

பயிற்சியும் உண்டு… வேலைவாய்ப்பும் உண்டு!

இன்று நேற்றல்ல காலங்காலமாக வேலையில்லாத் திண்டாட்டம் அழிக்கமுடியாத ஒன்றாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை நிச்சயம் லட்சக்கணக்கில்தான் இருக்கும். அப்படி படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்குத் தகுதியான நபர்களைத் தேடும் நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரும் அரிய பணியைச் செய்துகொண்டிருக்கிறது இந்திய தொழில் கூட்டமைப்பு (CII-Confederation of Indian Industry)-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம்.

இதன் தலைமை அதிகாரி பரமேஸ்வரிடம் பேசியபோது, வேலை தேடுபவர்களுக்குப் பயிற்சி அளித்து எவ்வாறு கம்பெனிகளில் வேலைக்குச் சேர்த்துவிடப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துக் கூறினார். “சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வளாகத்தில் இயங்கிவருகிறது சிஐஐ (இந்திய தொழில்துறை கூட்டமைப்பு) - டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம். சிஐஐ கூட்டமைப்பு உலகம் முழுவதும் உள்ளது.

இந்திய வேலைவாய்ப்பு மையங்களில் வெறும் டேட்டா மட்டும்தான் உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் எந்தத் திட்டமும் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசால் கடந்த 2015 ஜூலை 20ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் தேசிய தொழில்நெறி சேவை (NCS-National Career Service - நேஷனல் கேரியர் சர்வீஸ்). இந்தியா முழுவதும் 100 மையங்களை உருவாக்க வேண்டும் எனத் தொடங்கப்பட்டது. அதில் 3 மையங்கள் மட்டும் சிஐஐ-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், ஒன்றுதான் சென்னையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வளாகத்தில் இயங்கிவரும் சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம். இது இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒரு திட்டம். இந்தத் தி்ட்டத்தைச் செயல்படுத்த சிஐஐ-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் டாடா நிறுவனமான டைட்டனுடன் இணைந்து செயல்படுத்துகிறது” என்றார்.  

 இந்த மையத்தின் பணி என்னென்ன என்பதைப் பற்றி பரமேஸ்வர் விரிவாகக் கூறியபோது, “வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைப்பதுதான். வேலை தேடுபவர்களுக்குத் தொழில்நெறி ஆலோசனையும், பயிற்சியும் கொடுத்து இரண்டுபேரையும் இணைக்கிறோம். உதாரணத்துக்கு, ஒரு கார்ப்பரேட் கம்பெனி தங்கள் நிறுவனத்திற்கு ஒரு வேலைக்கு எந்தக் கல்வித்தகுதியில் எப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர்கள் வேண்டும் எனக் கேட்கும்.

உதாரணமாக, டெலிவரி பாய்ஸ் என்றால் 10 அல்லது 12ஆம் வகுப்பு  படித்திருக்க வேண்டும், ஒரு பில்லை படித்து புரிந்துகொள்ளக் கூடிய அளவு அறிவுத்திறன் வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், பொருட்களை டெலிவரி கொடுத்துவிட்டு பணம் பெற்று வர வேண்டும் என்ற வரைமுறை இருக்கும். இதுபோன்ற வேலைக்குத் தகுதியான நபர்களை ஒருங்கிணைத்து ஒருநாள் திறன் பயிற்சி அளித்து குறிப்பிட்ட கம்பெனிக்கு அனுப்பி வைப்போம். ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்று முழுத் திறமையுடன் செல்வதால், அந்த கம்பெனியில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

சிஐஐக்கு 10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு (எஞ்சினியரிங், கலை மற்றும் அறிவியல்), மருத்துவம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. என எந்தக் கல்வித்தகுதியோடு வரும் அனைத்து வேலைதேடுபவர்களுக்கும் கூடுதல் பயிற்சி அளித்து வேலை வாங்கித் தருகிறோம். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே, ஒரு நிறுவனத்தில் வேலை செய்து அனுபவம் பெற்றவர்களுக்கும் வேறு கம்பெனியில் வேலை கேட்டால் அதற்கான பயிற்சிகள் அளித்து வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்.

அதே சமயம் வேலைக்கு ஆட்கள் வேண்டும் எனக் கேட்டு, என்.சி.எஸ்-யில் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் பதிவு செய்துள்ளன. அதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்னை இருக்காது. சென்னையில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் தங்களுக்குப் பணியாளர்கள் தேவை எனக் கேட்டு பதிவு செய்து வைத்துள்ளன. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் முக்கியமாகக் குறிப்பி–்ட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எம்.ஆர்.எஃப், எவர்சென்டாய் (Eversendai), மல்டி நேஷனல் கம்பெனி, விப்ரோ, லான்சன் டொயோட்டோ, ஹிண்டுஜா, டி.வி.எஸ். எனப் பிரபலமான வெளிநாட்டு கம்பெனிகளும், பல்வேறு வங்கித்துறையைச் சார்ந்த நிறுவனங்களும் பதிவு செய்து வைத்துள்ளன” என்றார் பரமேஸ்வர்.

“எங்கள் மையத்தின் தனித்திறன் என்னவென்றால், வேலை கேட்டு பதிவு செய்துள்ள ஒருவரை உடனடியாக ஒரு கம்பெனிக்கு நேர்முகத் தேர்வுக்கு அனுப்பிவிட மாட்டோம். அவர்களை எங்கள் மையத்திற்கு வரச்சொல்வோம். மையத்தில் உள்ள இரண்டு தொழிற்பயிற்சி அரங்கத்தில் வைத்து ஆலோசனைகள், திறன் மதி்ப்பீடு, வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள், திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள், மென்திறன் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்படும்.

அதேபோல், நிறுவனங்கள் தங்களுக்கு இந்தத் தகுதி மற்றும் திறமையில் வேலையாட்கள் வேண்டும் எனக் கேட்கும். எனவே, 20 பேர் வேண்டும் என்று கேட்டால், 100 பேருக்கு பயிற்சி அளித்து, அந்த கம்பெனியில் சேர்ந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் பயன்கள் குறித்து விளக்கிக்கூறி உங்களுக்கு விருப்பம் தானா எனக் கேட்டுவிட்டு நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்வோம்.

இவ்வாறு கம்பெனிகளுக்குத் தேவையான திறன் மேம்படுத்தப்பட்டு அனுப்பப்படும் நபர்களை கம்பெனிக்காரர்கள் அதிக ஆர்வத்துடன் வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்” என்கிறார். மேலும் அவர் கூறும்போது, “வேலை தேடுபவர்கள் எங்கள் www.mcc-centre.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது நேரடியாக வந்தும் விண்ணப்பிக்கலாம். பதிவிற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. நேரடியாக வருவதில் பயன் என்னவென்றால், எங்களிடம் எந்தெந்த கம்பெனிகள் எல்லாம் இப்போது பதிவில் இருகின்றன, வந்திருப்பவர் அதற்கு பொருந்திவருவாரா என ஒப்பீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து, எங்கள் மையத்தில் திறன் மதிப்பீடு செய்து கொள்ளலாம். அதாவது, செல்ஃப் அசெஸ்மென்ட். இந்தத் தேர்வை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அந்தத் தேர்வை எடுத்துக்கொள்ளும்போது, அவரிடம் என்னென்ன திறமைகள் உள்ளன, கூடுதலாக என்ன திறமைகள் உள்ளன என்பன வெளிப்படும். இதற்கு மதிப்பெண் கிடையாது. 50 கேள்விகள் கேட்கப்படும். இதில் சரியான பதில் என்பதைவிட அவர்களின் விருப்பம் என்ன, பிறவியிலேயே உள்ள திறமை என்ன என்பதெல்லாம் இந்தத் தேர்வில் தெரிந்துவிடும். அதாவது, பேச்சாற்றல் இருக்கும், தொழில்நுட்ப அறிவுத் திறன் இருக்கும்.

சிலர் தைரியமாகப் பேசுவார்கள். இந்த மாதிரி அவர்களின் திறமையை மதிப்பீடு செய்துகொள்ள முடியும். இதன்மூலம் அவர்கள் எந்தத் துறையில் சென்றால் வெற்றியாளராக வர முடியும் என்பதைக் கண்டறிந்து ஆலோசனைகள் கொடுப்போம். இதில் ஆறு வகை மதிப்பீடு உள்ளன. அதில் எதில் அவர்கள் திறமையானவர்கள் என்பதை மதிப்பிட்டுக் கொடுத்துவிடுவோம். தன்னிடம் என்ன திறன் இருக்கிறது அல்லது  தன்னிடம் எந்த திறன் குறைவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அந்தத் துறையில் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
அதற்கான பயிற்சியை அளிப்போம். இந்தப் பயிற்சி முடிந்ததும் அந்தத் துறையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம்.  கிட்டத்தட்ட 3 மாத காலத்துக்குள் இங்கு பயிற்சி பெற்றவர்கள் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கம்பெனிகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு வேலைவாய்ப்பு வேண்டி எங்கள் வலைத்தளத்தில் மட்டுமே ஐயாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

நேரடியாகத் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்” என்று புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார். “வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள் தேவைப்படும் கம்பெனிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு முகாம் மட்டுமல்லாது வாரத்திற்கு இரண்டு மூன்று
கம்பெனிகள் எங்கள் மையத்திற்கு வந்து வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் குறுகிய கால மென்திறன் பயிற்சி, பேச்சுத்திறன் பயிற்சி, நல்ல செயல்பாடுகளுக்கான பயிற்சி, தொழில்நுட்பம் எனக் கட்டணமில்லா பயிற்சிகளும், ஒரு மாதம், இரண்டு மாதம் என நீண்ட காலக் கட்டணப் பயிற்சிகளும்  எனப் பல பயிற்சிகள் உள்ளன. இந்தப் பயிற்சி எடுத்துக்கொண்டவர்களுக்கு வேலைக்கான வாய்ப்புகளை நாங்கள் அமைத்துக் கொடுத்து வருகிறோம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்பினை வழங்க வந்திருந்தன. இதில், சுமார் 3500 பேர் கலந்து கொண்டனர். இரண்டுநாள் முகாமில் 1200 பேர் தேர்வு பெற்றனர். 805 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.  

அதாவது, ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கம்பெனி, அதிலும் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு கம்பெனி என அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதை மட்டுமே எங்கள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்திவருகிறோம்” என்று சிஐஐ-ன் முழு செயல்பாடுகளையும் சொல்லிமுடித்தார் பரமேஸ்வர். வேலை தேடுபவர்களையும் வேலைக்கு ஆள் தேடுபவர்களையும் ஒரு மையத்தில் சந்திக்க வைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரும் இந்த அமைப்பின் பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதான்.

- தோ.திருத்துவராஜ்

X