பெண் தொழில்முனைவோருக்கான ஸ்டாண்ட் அப் கடன் திட்டம்!

8/30/2018 5:42:36 PM

பெண் தொழில்முனைவோருக்கான ஸ்டாண்ட் அப் கடன் திட்டம்!

நன்றி குங்குமம் கல்வி - வேலை வழிகாட்டி

நிதியுதவி திட்டம்

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும். ஆனால், முதலீட்டுக்குத்தான் பணம் இல்லை என்று பல பேர் செய்வதறியாது கந்துவட்டி பிரச்னைகளில் விழுகிறார்கள்.தொழில்முனைவோருக்கும் சுயமாக தொழில் தொடங்க நினைப்போருக்கும் மத்திய மாநில அரசுகள் நிறைய கடன் திட்டங்களை மானியத்துடன் வழங்கிவருகின்றன. அந்தக் கடன் திட்டங்களைப் பற்றி தொடர்ந்து வழங்கிவருகிறோம். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் கடன் திட்டமான ஸ்டாண்ட்அப் (Standup Scheme) திட்டம் பற்றி இனி பார்ப்போம்.

மத்திய அரசின் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் புதிய பெண் தொழில்முனைவோருக்கான திட்டம். இத்திட்டத்தில் SC/ST மற்றும் பெண்களுக்கு 51% மேல் பங்குகள் உள்ள பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தில் எந்தவிதமான சொத்துப் பிணையமும் இல்லாமல் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் பெறும் திட்டம் இது.

இத்திட்டதில் பயனாளிகள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் ஆகிய அனைத்துத் தொழில்களுக்கும் கடன் பெறலாம்இத்திட்டதில் நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கிளையும் ஒரு SC/ST ஆரம்பிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு பெண் தொழில்முனைவோர் ஆரம்பிக்கும் நிறுவனத்திற்கு கடன் வழங்கவேண்டும். இந்தியாவில் 1.25 லட்சம் வங்கிக் கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 17,000 வங்கிக் கிளைகள் உள்ளன. எனவே, 17,000 பெண் தொழில்முனைவோர் தொழில் கடன் பெற வாய்ப்பு உள்ளது.

இத்திட்டம் முற்றிலும் புதியதாக ஆரம்பிக்கும் தொழில்களுக்கான (New Enterprises) திட்டம். இத்திட்டத்தில் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்ய கடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலமாக வங்கியில் கடன் தொகையாக திட்ட மதிப்பில் 75% கொடுக்கப்படும். 25% இத்திட்ட பயனாளிகள் தங்கள் பங்காக கொண்டுவர வேண்டும். 75% காலக்கடன் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகிய இரண்டிற்குமான  தொகை ஆகும். இதற்கான வட்டி விகிதம் மிகக் குறைந்த அளவு இருக்கும். என்றும் வங்கியின் குறைந்த வட்டி (Basic Rate) +3% அதிகமாக இருக்கலாம்.

இந்தத் திட்டத்தில் கடன் பெறும் பயனாளிகள் கிரடிட் கேரண்டி ஃபண்ட் திட்டம் ஸ்டாண்ட்அப் (CGTFSIL)-ல் இணைக்கப்பட்டு கடன் வழங்கப்படும். கடனை நிறுவனம் கட்ட தவறும் பட்சத்தில் இந்த நிறுவனம் கடனில் 80% வரை அரசு வங்கிக்கு செலுத்தும். கடன் திரும்ப செலுத்தும் காலம் ஏழு வருடமாகவும் அதில் 18 மாதம் வரை விடுமுறை காலமாக இருக்கும்.

இந்த 18 மாதத்தில் கடனுக்கான வட்டியை மட்டும் கட்டினால் போதும்.இந்தத் திட்டத்தில் நடைமுறை மூலதனம் ரூ.10 லட்சத்திற்கு உட்பட்டு இருந்தால் காலக் கடனாகவும் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் நடைமுறை மூலதனக் கடனாகவும் (CC LIMIT) வழங்கப்படும். மேலும் ரூபே டெபிட் கார்டு பெறவும் தகுதியுடையவர்கள்.

இதில் பயனாளியின் 25% தொழில்முனைவோர் முதலீட்டுப் பணத்தினை பிற மத்திய மாநில அரசுகளின் மானியத் திட்டங்களில் இருந்தும் பெறலாம். குறிப்பாக மத்திய மாநில அரசின் முதலீட்டு மானியத் திட்டத்தில் இருந்து பெறலாம். இந்த மானிய தொகை பெறப்படும்போது பயனாளிகளின் பங்கு குறைந்தபட்சம் திட்ட மதிப்பில் 10% இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

மூன்று வழிகளில் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

1)இந்தத் திட்டத்தில் கடன் பெற வங்கியை நேரடியாக அணுகலாம்.
2)இதன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனுடைய இணையதள முகவரி www.standupmitra.in அதில் கேட்கப்படும் விவரங்களாவன...

தொழில் தொடங்க உங்களிடம் உள்ள இடத்தின் விலாசம்,திட்ட அறிக்கை தயாரிக்க உதவிகள்,உங்களுக்கு தேவையான திறன் பயிற்சி,உங்களின் தற்போதைய வங்கிக் கணக்கின் விவரம்,உங்களுக்கு தொழிலில் உள்ள முன் அனுபவம் அனைத்தையும் அறிவிக்க வேண்டும்.இந்த தகவலின் அடிப்படையில் நீங்கள் பயிற்சியாளரா அல்லது உடனடியாக தொழில் ஆரம்பிக்க கூடியவரா என ஆராயப்பட்டு அதற்கான உதவிகள் செய்யப்படும்.

பயிற்சியாளர் எனில் உங்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க உதவி முதலியவை பெற வழிகாட்டுவார்கள். தாங்கள் உடனடியாக தொழில் தொடங்குபவர் எனில் உங்களை வங்கிகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.
இந்த விவரங்கள் எல்.டி.எம் (முதன்மை வங்கி மேலாளார்) மூலம் சிட்பி மற்றும் நபார்டு ஆகியவை உங்களுக்கு பொது உதவிபுரியும் நிறுவனமாக செயல்படுவார்கள்.

3) மூன்றாவதாக உங்கள் மாவட்டத்திற்கான முதன்மை வங்கியின் மேலாளர் எல்.டி.எம் மூலமாகவும் விண்ணபிக்கலாம்.
எல்.டி.எம் என்பவர் யார்?

எல்.டி.எம் என்பவர் உங்கள் மாவட்டத்தில் அதிக கிளைகளைக் கொண்ட முதன்மை வங்கியின் அந்த வங்கி நியமித்த ஒரு மேலாளர் ஆவார். இவருக்கு தனி அலுவலகம் உண்டு. இவரை அணுகினால் இவர் நேரடியாக நீங்கள் கடன் பெறும் வங்கியினை தேர்வு செய்து கொடுப்பார்.
இந்த இணையப் பக்கத்தில் உள்ள அம்சங்கள்:

இணையப் பக்கத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். உதாரணமாக, உங்களுடைய வங்கி பற்றி தெரிந்துகொள்ள, உங்கள் முகவரியை அடித்து வங்கி என்ற பொருளில் தேடினால் அருகில் உள்ள வங்கிகளின் பெயர்கள் வரைபடத்தில் தோன்றும். அந்த வங்கியை அணுகலாம் அதன் முகவரி மற்றும் தொலைபேசி எண் இருக்கும்.

உங்கள் மாவட்டத்திற்கான எல்.டி.எம்- முகவரியை தேடினால் அவரின் முகவரி மற்றும் அலைபேசி எண் கிடைக்கும். இணையத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்து தகவலும் சுலபமாக பெறலாம்.தொழில்முனைவோர் பங்கு குறைந்தது 10% இருக்க வேண்டும். ஏதாவது மானியம் வருமானால் அதை உங்கள் பங்காக எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தம் 25% இருக்க வேண்டும். மானியம் தொழில் தொடங்கிய பின் கிடைக்கும் பட்சத்தில் அந்த மானியத்தின் அளவு பற்றி திட்ட மதிப்பீடு செய்யும்போதே கணக்கிட்டால் மட்டுமே அது தொழில்முனைவோருக்கு திரும்ப கிடைக்கும். இல்லையேல் கடனுடன் கழித்துவிடப்படும்.
நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்த பின் மாவட்ட எல்.டி.எம் அவர்களிடம் அணுகி விவரம் பெறலாம். மேலும் பயிற்சி மற்றும் விவரம் பெற சிட்பி மற்றும் நபார்ட்டு வங்கியை அணுகலாம்.

ஸ்டாண்ட்அப் திட்டம் மானிட்டரிங் கமிட்டிஇத்திட்டத்தை ஆராயும் குழு உங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் இருக்கும். இந்த உயர்குழு திட்டத்தின் அனைத்து விவரங்களையும் 3 மாதத்திற்கு ஒரு முறை ஆராயும். இதில் எல்.டி.எம், சிட்பி மற்றும் நபார்டு மேலாளர்கள் கலந்து கொள்வார்கள். வரும் அனைத்து விண்ணப்பங்களின் நிலை பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்.

வங்கிகள் உங்களின் அனைத்து விவரங்களையும் திட்டஅறிக்கையில் பெற்ற பின் வங்கியில் கடன் பெற எவ்வளவு காலம் ஆகும். நீங்கள் வங்கி கேட்கின்ற அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்த பின், ரூ.5.25 லட்சம் வரை கடன் 3 வாரங்களுக்குள் உங்களுக்கு தர வேண்டும்.

ரூ.25 லட்சம் முதல் 1 கோடி வரை கடன்  6 வாரங்களுக்குள் உங்களுக்கு தர வேண்டும் என்ற வங்கிகளின் விதிப்படி உங்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து உங்களுக்கு கடன் வழங்குவார்கள். உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கபடும்போது அதற்கான காரணத்தை 15 நாட்களுக்குள் உங்களுக்கும் கமிட்டிக்கும் கொடுக்க வேண்டும்.

பயன்பெறும் பயனாளிகள் பெற்ற கடனை உரிய வட்டியுடன் குறிப்பிட்ட தவணைகளில் சரியாக கட்ட வேண்டும். நீங்கள் வங்கியை அணுகும்போது உங்கள் விவரம், ஆரம்பிக்கும் தொழில் பற்றிய முழு விவரம், அது பங்குதாரராக இருந்தால் உங்கள் பங்கு 51%க்கு மேல் இருக்க வேண்டும். அதற்கான ஆவணம் மற்றும் திட்ட அறிக்கை தரவேண்டும். திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும்படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகள் எளிதில் கடன் கொடுக்கும்.

X