பாக்குமட்டையில் டீ கப் தயாரிக்கலாம்... மாதம் ரூ.40,000 சம்பாதிக்கலாம்!

10/31/2018 5:16:33 PM

பாக்குமட்டையில் டீ கப் தயாரிக்கலாம்... மாதம் ரூ.40,000 சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சுயதொழில்

தமிழகத்தில் 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அறிவிக்கப்பட உள்ளதாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களாலும் இன்றைக்கு மளிகைக்கடை, மருந்துக்கடை, உணவுவிடுதி என அனைத்து இடங்களிலும் இயற்கை சார்ந்த பொருட்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளன. இன்னும்  சிலர் ஒரு படி மேலே போய் செப்பினால் ஆன தண்ணீர் பாட்டில்களைக் கூட விலை அதிகமானாலும் கவலைப்படாமல் வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

‘‘பிளாஸ்டிக்குக்கு மாற்றாக உணவுப் பொருட்கள் பயன்பாட்டுக்கு பேப்பர் பிளேட், பாக்குமட்டைத் தட்டு என மாறிவரும் சூழ்நிலையில், டீக்கடைகளில் இனி முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது பாக்குமட்டை டீ கப்புகள். இந்த டீ கப்புகள் பல இடங்களில் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுவருவதால், சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கும் கைகொடுக்கும்’’ என்கிறார் சேலத்தில் விநாயகா பிளேட் அண்ட் கப்புகள் தயாரித்து விற்பனை செய்துவரும் பழனிச்சாமி. அவர் தரும் தகவல்களைப் பார்ப்போம்…

டீக்கடைகளில் கண்ணாடி டம்ப்ளர்கள் இருந்தாலும், ஒருவர் குடித்ததில் இன்னொருவர் குடிக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கு மாற்றாக வந்ததுதான் பேப்பர் கப். ஆனால், அதில் மெழுகு பூசப்பட்டுள்ளதால் அதையும் பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், நிரந்தரத் தீர்வாக யோசித்தபோது வந்ததுதான் இந்த பாக்குமட்டை டீ கப் தயாரிப்பு. இதை ஒருமுறை உபயோகித்து விட்டு எறிந்துவிட்டால் மண்ணில் மக்கிப் போய்விடும். சுற்றுச்சூழலுக்கு எந்தவித கெடுதலையும் விளைவிக்காது.

மேலும், டீயின் சுவை மாறாமல் அப்படியே இருக்கும். கூடவே, இயற்கையான மணமும் உண்டு. எனவே, வழக்கமாக ஒரே தயாரிப்பாகஇல்லாமல், புதிய புதிய வடிவங்களில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம். இது குடிசைத்தொழில் பட்டியலில் வருவதால் அரசின் மானியம் பெற்று இத்தொழிலைத் தொடங்கலாம். நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் இது.

சிறப்பம்சங்கள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நிரந்தர தடை விதிக்கவிருப்பதால் இந்த பாக்குமட்டை டீ கப்புகளின் தேவை அதிகம். எளிதில் மக்கும் தன்மைகொண்ட, குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இதன் மூலப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.

 இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொடங்கலாம். இந்த டீ கப்புகளில் சாப்பிட்டால் எளிதில் ஜீரணிக்கும். இது ஒரு 100% இயற்கைத் தயாரிப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் உற்பத்தியில் ரசாயனங்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதில்லை.வெப்பம் மற்றும் குளிர்ச்சி இரண்டையும் தாங்கக்கூடியது.

திட்ட மதிப்பீடு: ரூ.2.45 லட்சம்


முதலீடு: (தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள்)
இடம்: (சுமார் 500 சதுர அடி போதுமானது) வாடகை இயந்திரம்:  ரூ.2 லட்சம்
(ஒரு யூனிட் என்று சொல்லப்படும் கருவி 5 அச்சு களைக் கொண்டது)
பாக்குமட்டை (1 மாதத்திற்கு) - 15 ஆயிரம் மட்டைகள் (ஒரு மட்டையின் விலை ரூ.3. ஒரு மாதத்திற்கு 15,000 X ரூ.3 = ரூ.45,000
மொத்தம்:         ரூ.2.45 லட்சம்.


தயாரிப்பு முறை


பாக்குமட்டைகளை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். பின்னர் தேவையான அளவுகளில் வெட்டி எடுக்க கட்டிங் மெஷனில் கொடுக்க வேண்டும். இப்போது நாம் குறித்த அளவுகளில் பாக்குமட்டை வட்ட வடிவத்தில் துண்டு துண்டுகளாகிவிடும். இதனை எந்த வடிவத்தில் டீ கப்புகள் தயாரிக்க அச்சு வைத்துள்ளோமோ அந்த அச்சில் வைத்து அழுத்தி எடுக்க வேண்டும். இதனை 50 மற்றும் 100 என அடுக்கி பேக்கிங் செய்யவேண்டும். தயாரிப்பு முறை மிக மிக எளிதானது.

தேவையான பணியாளர்கள் மற்றும் ஊதியம்

 ஆபரேட்டர் 1     - ரூ.7,000
 பணியாளர் 1     - ரூ.5,000
 மொத்தம் 2     - ரூ.12,000


 உற்பத்தித் திறன் மற்றும் விற்பனை வரவு

ஒரு மாதத்திற்கான மூலப் பொருளான 15 ஆயிரம் பாக்குமட்டையில் (ஒரு மட்டையில் 5 டீ கப்புகள்) தோராயமாக 75,000 டீ கப்புகள் தயார் செய்ய முடியும். சந்தையில் 1 கப் மொத்த விலைக்கு 1 ரூபாய் முதல் 1 ரூபாய் 50 பைசா வரை விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். நாம் ஒரு கப்பின் விலை 1.50 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அப்படியானால் 1,12,500 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் மார்க்கெட்டிங் செய்வதைப் பொறுத்தே நமது விற்பனை லாப வரம்பு இருக்கும்.

விற்பனை வாய்ப்பு

டீக்கடைகள், உணவு விடுதிகள் மற்றும் திருமணம், திருவிழா என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இனி இந்த பாக்குமட்டை டீ கப்புகள்தான் வாங்குவார்கள். எனவே, அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். உற்பத்தியில் நல்ல தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைத்துக்கொண்டேயிருக்கும்.

 நிர்வாகச் செலவுகள்
 வாடகை                     - ரூ.5,000
(நகரம், கிராமத்திற்கு மாற்றம் உண்டு)
 மின்சாரம்                     - ரூ.3,000
(அரசு மானியத்தில்)
 இயந்திரப் பராமரிப்பு                 - ரூ.1000
 இதர செலவு                       - ரூ.1,000
 மொத்தம்                      - ரூ.10,000
  நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)
 மூலப்பொருட்கள்                - ரூ.45,000
 சம்பளம்                   - ரூ.12,000
 நிர்வாகச் செலவுகள்               - ரூ.10,000
 மொத்த செலவு               - ரூ.67,000
  லாப விவரம்
  விற்பனை மூலமான வரவு - ரூ.1,12,500
  மொத்த செலவு             - ரூ.67,000
  நிகர லாபம்                 - ரூ.45,500


வங்கிக் கடன் பெற்றும் இத்தொழிலை தொடங்கலாம்…


திட்ட மதிப்பீடு:             ரூ.2.45 லட்சம்
நமது பங்கு 5 சதவிகிதம்     - ரூ.12,250
மானியம் 25 சதவிகிதம்         - ரூ.61,250
வங்கிக் கடன் 70 சதவிகிதம் - ரூ.1,71,500

அரசு மானியம்: 25 - 35% PMEGP Scheme & 25% NEEDS Scheme
கடன்திருப்பம் மற்றும் வட்டி (ரூ.):
மூலதன கடன் திருப்பம்
(60 மாதங்கள்)     - ரூ.1,71,500
மூலதன கடன் வட்டி
(12.5 சதவிகிதம்)     - ரூ.64,313
மொத்தம்     - ரூ.2,35,813


ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டிய தொகை     - ரூ.3,930

லாப விவரம்
மொத்த வரவு -     ரூ.1,12,500
மொத்த செலவு -     ரூ.67,000

கடன் திருப்பம்
மற்றும் வட்டி -     ரூ.3,930
நிகர லாபம் -     ரூ.41,570

தற்போது கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் அதிக வரவேற்பை பெற்றுவரும் இந்தத் தொழிலை தொடங்கினால் நல்ல வருமானம் வருவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. இந்தத் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் புதிய தொழில்முனைவோர்கள் இந்தத் தொழிலில் இறங்கினால் உங்கள் வருங்காலம் வளமும் நலமும் பெற்று சிறப்படைய வாய்ப்புள்ளது.

திட்ட அறிக்கை: கூடுதல் இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி, சென்னை - 600 012.

- தோ.திருத்துவராஜ்

X