நீங்களும் தொழில்முனைவோராக அரிய வாய்ப்பு!

11/12/2018 3:05:34 PM

நீங்களும் தொழில்முனைவோராக அரிய வாய்ப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சுயதொழில்

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) லாப நோக்கமில்லா நிறுவனமாக தமிழக அரசால் 2001-ம் ஆண்டு தொடங்கப்
பட்டது. இந்நிறுவனம், தொழில் தொடங்குவது முதல் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிட பல்வேறு பயிற்சிகளை  வழங்கி வருகிறது. இவை மட்டுமின்றி புத்தொழிலுக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை தொழில்முனைவோருக்கு ஏற்படுத்தித் தருகிறது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து துணை இயக்குநர் சி.அழகிரிசாமி கூறியவற்றை இனி பார்ப்போம்…

‘‘தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வேகமான மற்றும் தொய்வில்லாத நிலைத்த தன்மையினை உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, சிறந்த தொழில்முனைவுத் திறமைகளை ஏற்படுத்துதல், வர்த்தக பிணைப்புகளை உருவாக்குதல் மற்றும் பங்குதாரர்களைக் கொண்ட வர்த்தக அமைப்பை ஏற்படுத்துதல், உரிய ஆலோசனை வழங்குதல், பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மூலமாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்நிறுவனம் வழிவகுக்கிறது. இந்நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இந்நாள் வரை பல்வேறு துறைகளில் 1.91 லட்சம் தொழில்முனைவோர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது” என்று செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்.

இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகள் குறித்தும் பயனடைந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது குறித்தும் கூறும்போது, ‘‘தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் விரிவான மேலாண்மைத் திட்டம் 2016-2021 மூலம் தொழில், வாழ்க்கை சுழற்சி, செயல்முறை சார்ந்த பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு சேவைகளை வழங்கி உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பநிலை தொழில்முனைவோர்கள், தொழில்புரிவோர்கள், தொழில் வழிகாட்டுநர்கள் மற்றும் தொழில் குழுமங்கள் உள்ளடக்கிய மொத்தம் 26,097 நபர்களுக்கு 2017-18ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களின்கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள் நான்கு கட்டங்களாக, அதாவது கருத்துரு நிலை, தொழில் திட்டமிடல் நிலை, தொழில் தொடங்கும் நிலை மற்றும் நடப்புத் தொழில்முனைவோர்களுக்கு என ஒரு நாள் முதல் ஒரு மாத காலம் வரை நடத்தப்படுகின்றன.

மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு தகுந்தவாறு, தற்சமயம் இயங்கிவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்
களுக்காக தமிழ்நாடு முழுவதும் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் 1/2 நாளிலிருந்து 5 நாட்கள் வரை குறிப்பாக வணிக மற்றும் சேவை வரி (GST) / மின் வழி பட்டியலிடல் (E-Way Billing), நிதி மற்றும் நடைமுறை மூலதன மேலாண்மை நிர்வகித்தல் (Fund flow and working capital management), குடும்ப வணிக மேலாண்மை (Family Business Management), மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் (Digital Marketing), விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் வியாபார யுக்திகள் (Sales and Marketing Strategy), ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய விவரங்கள் (Export and Import Procedures), காப்பீடு சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் (Risk and Insurance Management) மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் (Digital Payments) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் (TAHDCO) கடன்பெறும் தொழில்முனைவோருக்காக சிறப்பு பயிற்சியினை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சிறப்பாக நடத்தி வருகிறது’’ என்றார்.

மேலும் தொடர்ந்த அழகிரிசாமி, ‘‘வணிக உதவி சேவைகள் திட்டத்தில் தொழில் தொடங்கும்போது, புதிய தொழில்முனைவோருக்கு அனுபவமிக்க தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடியாக சந்திப்புகள் நடத்தி வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.  தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் குழுமங்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பயிற்சி முகாம்/கருத்தரங்கங்கள்/பயிற்சிப் பட்டறைகள் நடத்திவருகிறது.

இப்பயிற்சித் திட்டங்களின் மூலம் மேற்படி குழுமங்கள் மற்றும் குழும அங்கத்தினர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் தன்மையை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்
பட்டுள்ளது.’’ என்றவர் ‘‘மாணவர்களுக்கும்கூட புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு வளர்ச்சித் திட்டம் (IEDP) செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இதில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், தொழில்முனைவு மற்றும் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முழுமையான புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு வளர்ச்சித் திட்டத்தினை செயல்படுத்திவருகிறது.

தொழில்முனைவு மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு உயர்கல்வி நிறுவனங்களிலும் அதனை சார்ந்த இடங்களிலும் சாதகமான சூழலை உருவாக்குதல், பயிற்சி நடத்துநர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க திறமைகளை வளர்த்தல், மற்றும் அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கவும் அதனை வணிகமயமாக்கவும் உறுதுணையாய் இருத்தல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் 9 முன்னோடி கல்வி நிறுவனங்கள் மண்டல மையங்களாக (HUBS) தெரிவு செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள 25-30 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்குள்ளாகவோ அல்லது அருகிலோ புதிய தொழில் முனையங்களை அமைக்க உதவுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 384 கல்லூரிகள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன’’ என்றார்.

‘‘தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாட்டிற்கான புத்தொழில்முனைவு குறித்த ஒரு வரைவு செயல்திட்டத்தினை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. புதிய தொழில் எண்ணங்களுக்கு உருவளிக்கும் போட்டிகளையும் குறிப்பிட்ட தலைப்புகளில் முன்வைக்கப்படும் பெருத்த சவால்களிலும் வெற்றி பெற்ற தொடக்க நிலை தொழில்முனைவோர்களுக்கு ஆதார நிதி உதவி வழங்கி இந்நிறுவனம் ஆதரவு அளிக்கிறது.

புத்தொழில் மற்றும் தொழில்முனைவு கலாசாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு EDII தமிழ்நாடு பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றது. இவ்வாறாக தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நேரடி மற்றும் இணைய வழியில் தொழில்முனைதலுக்கான சான்றிதழ் பயிற்சியை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புத்தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, புதிய எண்ணங்கள்/கண்டுபிடிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை நிதி உதவி EDII வழங்குகிறது.

 மேலும் தொழில் முன்னேற்றத்திற்கான புத்தொழில்முனைவோர்களை உருவாக்கும் பொருட்டு தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளுக்காக, NIESBUD, புதுடெல்லி, FFDC, கன்னோஜ், உத்திரபிரதேசம், IFMR, சென்னை, தமிழ்நாடு மகளிர் உயிரி தொழில்நுட்ப பூங்கா, சென்னை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.’’ என்கிறார் அழகிரிசாமி.

தொழில் தொடங்குவதில் உள்ள வாய்ப்புகள் பற்றியும், அரசின் சலுகைகள் போன்றவற்றை வெகுஜன மக்களிடம் எடுத்து செல்ல `தொழிலும் வாழ்வும்’ என்ற தலைப்பில் அகில இந்திய வானொலியின் ரெயின்போ பண்பலையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 4.45-5.00 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

மேலும், புதிய தொழில்முனைவோருக்காக தொழிற்பயணம், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பன்னாட்டளவில் சந்தைப்படுத்த கண்காட்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு, சமூக தொழில்முனைவுக்கான கருத்தரங்கு, தொழில்நுட்ப அறிவை பெருக்குவதற்கான பயணங்கள் மற்றும் தொழில்முனைவோர் புதொழில்முனைவோர் ஆகியோரின் நலன் கருதி தேவையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.’’ என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சேவை சார்ந்த செயல்பாடுகளின் பட்டியலை மிக விவரமாக சொல்லி முடித்தார் துணை இயக்குநர் அழகிரிசாமி.

சுயமாக தொழில் தொடங்க ஏகப்பட்ட வாய்ப்புகளும் பயிற்சிகளும் வழிகாட்டுதல்களும் வழங்க தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்க காத்திருக்கும்போது நாமும் தொழில்முனைவோர் ஆக முயற்சிப்போமே!   
              
-தோ. திருத்துவராஜ்

X