ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

12/20/2018 3:29:44 PM

ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உலகம் முழுவதும் நான்காம் தொழிற்புரட்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில் நம் வாழ்க்கையைக் கட்டமைப்பதற்கு ஏற்ற பல அறிவியல், கலை, தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளும் புதிது புதிதாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈவென்ட் மேனேஜ்மென்ட் (Event Management) எனும் துறையின் அவசியம் சற்று காலம் தாழ்த்திதான் ஆசிய கண்டத்திற்கு தெரிய வந்தது. குறிப்பாக சொல்வதென்றால் இந்தியாவுக்கு தாமதமாக அறிமுகமான படிப்பு. அதேசமயம் அதிவேகமாக வளர்ச்சியடைந்த துறையாகிவிட்டது.

இந்தியா முழுவதும் டாக்டர் ஹோஸி பிவன்டிவல்லா மற்றும் அவரது குழுவும் 1990-களில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இறை பக்தியையும், வழிபாட்டையும் அதிகம் போற்றும் இந்திய நாட்டில் வண்ணமயமான திருவிழாக்கள், பல்வேறு கலாசாரப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் குழந்தைக்கு பெயர்சூட்டுதல் முதல் எழுத்தறிவித்தல், பூப்பெய்தல் மற்றும் கல்யாணம் என அனைத்து சடங்குகளும் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

மேலும் பன்மைத்தன்மை கொண்ட இந்திய பெருநிலத்தில் ஊடகம், சினிமா, விளையாட்டு போன்ற பொழுதுபோக்குத் தொழில்துறைகளின் வளர்ச்சி அசுரவேகத்தில் உள்ளது. ஆகையால் இதுபோன்ற பாரம்பரியமிக்க இந்திய தேசத்தில் மரபார்ந்த மற்றும் பொழுதுபோக்குத் துறைகளின் முக்கிய நிகழ்வுகளை சிறு தவறு கூட இல்லாமல் ஒருங்கிணைக்க தொழில்முறை பயிற்சி பெற்ற ஈவென்ட் மேனேஜர்களின் தேவை அவசியமாகிறது. தொழில் நேர்த்தி கொண்ட ஈவென்ட் மேனேஜர்களின் தேவை வரும் காலங்களில் அதிகமாகும் என்பதை தனது நான்கு ஆண்டுகால ஆய்வில் கணித்தது அக்குழு.

மும்பையை தலைமையிடமாக கொண்டு 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட National  Institute of Event Management  (NIEM) எனும் தேசியக் கல்விநிறுவனம், ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பை முதன் முதலில் ஆசிய கண்டத்தில் அறிமுகப்படுத்திய பெருமை பெற்றது. தனது பதினெட்டாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்த இக்கல்விநிறுவனம் தற்போது அகமதாபாத், ஒடிசா, புனே, அலகாபாத், புதுடெல்லி கொல்கத்தா என இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் கிளைகளை பரப்பி தொடர்ந்து சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கிவருகிறது.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பில் தரமான மாணவர்களை உருவாக்குவதில் இக்கல்விநிறுவனம் உலக அளவில் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது. மேலும் இப்படிப்பை ஆசிய கண்டத்தில் அறிமுகப்படுத்திய டாக்டர்.ஹோஸி பிவன்டிவல்லாவின் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காக தேசிய விருது உட்பட பல மாநில விருதுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல், காமன்வெல்த், இலக்கிய விழாக்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான முக்கிய நிகழ்வுகளும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள், பொழுதுபோக்குத் துறையில் விருது வழங்கும் விழா, லைவ் ஷோக்கள், இசை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ, கல்வித்துறையில் செமினார், சிம்போசியம்,  விவாத நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மரபார்ந்த விழாக்கள் என உள்நாட்டு நிகழ்வுகளும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களாலேயே நடத்தப்படுகின்றன.

இவ்வாறு உலகத்தோடு, சமூகத்தையும், சமூகத்தோடு ஒவ்வொரு மனிதனையும் ஒன்றிணைக்கும் நிகழ்வுகளை சரியான முறையில் ஒருங்கிணைப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நோக்கத்துடனேயே (Event Management) நிகழ்ச்சி மேலாண்மை படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது முதல் இப்படிப்பின் முக்கியத்துவம் கூடியது. Event Planner, Business Development Manager, Public Relations Officer, Wedding Planner, Account Manager, Client Servicing Manager, Brand Manager, Artist Manager, Corporate Communications Specialist போன்ற பல தளங்களில் வேலைவாய்ப்பும்
அதிகரித்தது.

தனக்கு வரும் ஈவென்ட் புராஜெக்டின் கான்செப்டை டெக்னிக்கலாக மேம்படுத்துவது, ப்ரமோட் செய்வது, ப்ராப்ளம் சால்விங் டெக்னிக்கை வளர்த்து நிகழ்வுகளின்போது உண்டாகும் இடையூறு தடைகளை நீக்கி நேரம் தவறாமல் ஈவென்டை ஒருங்கிணைப்பதுதான் திறன்மிகு ஈவென்ட் மேேனஜரின் தகுதியாக கருதப்படுகிறது.

புனே, மும்பை, அகமதாபாத், கோல்ஹாப்பூர், ஜோத்பூர், ஒடிசா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், பாட்னா, கொல்கத்தா, இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள National Institute of Event Management (NIEM) கல்விநிறுவனங்களில் 11 மாதகால அளவிலான Diploma in Event Management (DEM) கோர்ஸும், முதுகலை படிப்பான Post Graduate Diploma in Event Management (PGDEM) கோர்ஸும், ராய்ப்பூர், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் 11 மாத கால அளவிலான முதுகலைப் படிப்பான Post Graduate Diploma in Event Management (PGDEM) கோர்ஸும், மும்பை மற்றும் அகமதாபாத் கல்விநிறுவனங்களில் முதுகலை படிப்பான Post-Graduate Diploma in Advertising, Media & Event Management (PGDAME) கோர்ஸும், மேலும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் கல்வி நிறுவனங்களில் மூன்று வருட இளங்கலை படிப்பான Bachelor of Business Administration in Event Managemant (BBAEM) மற்றும் இரண்டு வருட மேலாண்மை படிப்பான Master of Business Administration in Event Management (MBAEM) முழுநேரப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்ய சில படிப்புகள்…

* Event Logistics,
* Event Co-ordination,
* Event Accounting,
* Public Relations,
* Marketing Management,
* Brand Management,
* Media Management,
* Celibrity Management,
* Security and Safety Management.

இந்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் தவிர மற்ற பல முன்னணி கல்விநிறுவனங்களும் இரண்டு வருட படிப்பான Master of Business Administration in Event Management படிப்பை வழங்கிவருகின்றன.

- வெங்கட்

X