அக்ரி கிளினிக் அக்ரி பிசினஸ் தொடங்க இலவச பயிற்சி!

12/26/2018 3:55:49 PM

அக்ரி கிளினிக் அக்ரி பிசினஸ் தொடங்க இலவச பயிற்சி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

பயிற்சி

விவசாயம் மற்றும் விவசாய தொழில்களை உருவாக்கும் விவசாயத் தொழில்முனைவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பல லட்சம் ரூபாய் கடன் மற்றும் மானியம் வழங்கிவருகிறது. மத்திய அரசின் ‘அக்ரி கிளினிக்’ மற்றும் ‘அக்ரி பிசினஸ்’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 20 லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 36 சதவிகிதம் மானியம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதில், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பால்பண்ணை மற்றும் விவசாய இடுபொருட்கள் பண்ணை அமைத்தல் என்பது உள்ளிட்ட பல தொழில்கள் அடங்கும்.

நாமக்கல்லில் கேர் தொண்டு நிறுவனம் மூலம் இத்தொழில்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் கடன் ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து நிர்வாக அலுவலர் பழனிச்சாமியிடம் பேசியபோது, ‘‘இப்பயிற்சியானது மத்திய அரசின் (Ministry of Agriculture, Govt. of India) வேளாண் துறை மூலம் வழங்கப்படும் 2 மாத இலவச பயிற்சியாகும். வேலைவாய்ப்பு இல்லாத, விவசாயம் சம்பந்தப்பட்ட கல்வியை பயின்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி பெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் இறுதியில் மத்திய அரசின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். ரூ.20 லட்சம் வரை மானியத்துடன் கடன் வசதி பெற இச்சான்றிதழ் உதவுகிறது. இப்பயிற்சியின் மூலம் பெண்கள் மற்றும் SC, ST வகுப்பை சார்ந்தவர்கள் 44 சதவிகித மானியமும் மற்ற வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 36 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது’’ என்றவர் பயிற்சி வழங்கப்படும் இடம் மற்றும் கல்வித் தகுதி பற்றியும் விவரித்தார்.‘‘இப்பயிற்சியானது நாமக்கலில் உள்ள எங்களது கேர் தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இதுவரை 1200 மாணவ, மாணவிகள் இலவசமாக பயிற்சி பெற்றுள்ளனர். உணவு, தங்கும் இடம் ஆகியவை இலவசம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதி வசதி உள்ளது. இப்பயிற்சிக்கு கீழ்க்கண்ட கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓய்வுபெற்ற விவசாயம் சார்ந்த அதிகாரிகளும் இப்பயிற்சிக்கு தகுதியுடையவர்கள். டிசம்பர் மாத இறுதியில் இப்பயிற்சிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.

கல்வித் தகுதி : B.Sc (Agriculture, Horticulture, Forestry, Sericulture), B.V.Sc.,B.F.Sc (Fishery), B.E Agriculture, Graduates in Agri & Allied Sectors, Diploma (Agri, Horticulture, Dairy Technology), Plus Two Agri.

மேலும் விவரங்களுக்கு: 04286-285595, 220095 என்ற தொலைபேசி எண்ணிலும், 94432 20095, 81225 20095, 96777 80095 ஆகிய செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.
 
- தோ. திருத்துவராஜ்

X