புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

12/27/2018 3:10:11 PM

புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இனிவரும் அதிநவீன தொழில்நுட்பமயமான உலகம் தகவல்களால் கட்டமைக்கப்படவிருக்கிறது. பிக்டேட்டா, பிளாக் செயின், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என அதற்கான வேலைகள் அசுரவேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. மனிதனின் ஒவ்வொரு அசைவையும் தகவல்களாக்கி இயங்கும் உலகில் அனைத்து தரவுகளையும் கலெக்ட் செய்யவும், அனலைஸ் மற்றும் டிசைன் செய்து தகவல்களை துல்லியமாக தொகுப்பதில் புள்ளியியல் துறையின் (Statistics) பங்கு பிரதானமானது. அதிமுக்கியமானதால்தான் இத்துறையைத் திட்டமிடுதலுக்கான களம் என்கின்றனர்.

மனிதவளம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, மக்கள்தொகை, குற்ற விகிதங்கள், விபத்து விகிதங்கள், சுற்றுச்சூழல், விளையாட்டு, தேர்தல் விவரங்கள், வங்கிக் கணக்குகள் என நாட்டின் பொருளாதாரம் தொடங்கி உள்கட்டமைப்பு வரை அனைத்தையும் கண்காணிப்பதற்கும், கணிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் துறை மிகவும் பயன்படுகிறது. மேலும் பொருளின் விலை, தேவை, உற்பத்தி, நேரம் ஆகியவற்றை கணித்து தொழில்துறைகளின் பொருளாதார சிக்கல்களைத் தீர்த்து உற்பத்தித் துறையில் தவிர்க்க முடியாத முக்கிய அம்சமாக புள்ளியியல் துறை உள்ளது.

தகவல்களை அறிவியல் ரீதியாக ஆராய்வதே புள்ளியியல் துறையாகும்.  முக்கிய தகவல்களை சேகரிப்பது எப்படி, சேகரித்த தகவல்களை ஆராய்வது, விகிதாசாரங்கள் ஏற்படுத்தி தீர்வு காண்பதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியாக விளக்குவதே புள்ளியியல் படிப்புகளாகும். நவீன கால கணித டெக்னிக்குகளைப் பயன்படுத்தி பொருளாதாரம், மருத்துவம், சந்தை, உயிரியல், உளவியல், விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளின் தகவல்களையும் சேகரித்து ஆராய்ந்து சமர்பிப்பதே புள்ளியியலாளரின் பணியாகும். இப்படி மனிதனின் அனைத்துத் துறை செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது புள்ளியியல் துறை.

சிறந்த புள்ளியியளாலரின் தகுதிகள்:  

ஐ.டி டெக் திறன், எண்களில் தீரா ஆர்வம், நவீன கணித டெக்னிக்குகள் மற்றும் தகவல்களை கலெக்ட் செய்வதிலும், ஆராய்வதிலும் மேம்பட்ட திறன் கொண்டிருத்தல் ஆகியவையே சிறந்த புள்ளியியலாளரின் தகுதியாக கருதப்படுகிறது. மேலும் புதிய சாஃப்ட்வேர்கள் மற்றும் அனலைஸ் டிரெண்டுகளில் அப்டேட்டாக இருத்தல், ஸ்டேட்டிஸ்டிக்கல் மெத்தடாலஜியை பயன்படுத்தி தகவல்களிடையே ஊடுறுவுதல் போன்ற பண்புகளே சிறந்த புள்ளியியலாளரின் தரத்தைத் தீர்மானிக்கிறது.

வேலை வாய்ப்புகள் :

உற்பத்தி, தயாரிப்பு மற்றும் தரம் மேம்பாட்டு துறைகளில் புள்ளியியலாளர்களின் தேவை அதிகம் இருக்கிறது. மேலும் பார்மாசிட்டிகல், ஆட்டோமொபைல் மற்றும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் டிரெயல் டெஸ்டிங் மற்றும் புராடக்ட் எவாலுவேஷன் என்ற பிரிவிலும், வேளாண் துறைகளில் சந்தைப்படுத்தும் பிரிவுகளிலும், வங்கித் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் புள்ளியியல் துறை அதிமுக்கியமாக தேவைப்படுகிறது.

மக்கள்தொகை, வேலையில்லாமை, பொருளதார கண்காணிப்புகள் என சமூக பொருளாதார புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மக்கள் நலன் காக்க பல்வேறு தேசிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற அரசு நிர்வாக மேலாண்மை துறைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் புள்ளியியலாரின் தேவை அறிந்து வேலைவாய்ப்பை வழங்குகின்றன. மேலும் அக்கவுன்டிங், ஆடிட்டிங், மருத்துவம், சுற்றுச்சூழல், உணவு தொழில்நுட்பம், விவசாயம் போன்ற பல துறைகளில் புள்ளியியலாளிரின் பணி என்பது முக்கியமானது.

பணிகள் :

* Econometricians
* Statisticians
* Research Analysts
* BioStatisticians
* Biometricians
* Epidemiologistics
* Data Scientists
* SportsStatisticians
* Medical Statistician

கல்வித் தகுதி :

இத்துறையில் சிறப்பான இடத்தை அடைய விரும்புவோருக்கு Actuarial Science, Applied information Economics, BioStatisticians, Bussiness Statistics என பல அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் புள்ளியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் இளங்கலை புள்ளியியல், முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன. 50% மதிப்பெண்கள் என்ற அளவில் பத்தாவது மற்றும் +2-வில் தேர்ச்சி இளங்கலை படிப்பிற்கு கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. மேலும் கணித்தத்திலும், கம்ப்யூட்டரிலும் சிறப்பான விகிதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது இத்துறைக்கு இன்றியமையாதது ஆகும்.  

- வெங்கட்

X