தொழிற்சாலைப் பாதுகாப்பு பட்டயப்படிப்புகள்!

5/9/2019 4:23:55 PM

தொழிற்சாலைப் பாதுகாப்பு பட்டயப்படிப்புகள்!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

தொழிற்சாலைகளுக்கான ஆலோசனைச் சேவை மற்றும் தொழிலாளர் கல்வி நிறுவனங்களுக்கான பொது இயக்குநரகம் (Directorate General Factory Advice Service & Labour Institutes) இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் (Ministry of Labour & Employment) செயல்பட்டுவருகிறது.இந்த இயக்குநரகம் நடத்திவரும் தொழிலாளர் கல்வி நிறுவனங்களில் (Labour Institutes) தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கான தொழிற்சாலைப் பாதுகாப்புக்கான பட்டயப்படிப்புகளில் (Industrial Safety Diploma Courses) சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தொழிலாளர் கல்வி நிறுவனங்கள்

மத்தியத் தொழிலாளர் கல்வி நிறுவனம் (Central Labour Institute) மும்பையிலும், மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனங்கள் (Regional Labour Institutes) சென்னை, பரிதாபாத், கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள்,

டையூ & டாமன் மற்றும் தாத்ரா & நகர்ஹவேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மும்பையில் மத்தியத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குச் சென்னையில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், அரியானா, இமாச்சலப்பிரதேசம்,

ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், சண்டிகர் மற்றும் டெல்லி ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிதாபாத்தில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராஞ்சல், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு கான்பூரில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும், பீகார், ஒடிசா,

மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொல்கத்தாவில் மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனமும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பட்டயப்படிப்புகள்

இக்கல்வி நிறுவனங்களில் ஓர் ஆண்டு கால அளவிலான, தொழிற்சாலைப் பாதுகாப்பு மேம்பட்ட பட்டயப்படிப்பு (Advanced Diploma in Industrial Safety - ADIS), தொழிற்சாலைப் பாதுகாப்புப் பட்டயப்படிப்பு (Diploma in Industrial Safety - DIS), தொழிற்சாலைப் பாதுகாப்பு முதுநிலைப் பட்டயப்படிப்பு (Post Diploma in Industrial Safety - PDIS) எனும் மூன்று விதமான தொழிற்சாலைப் பட்டயப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

மேற்காணும் பட்டயப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்குப் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் ஏதாவதொரு இளநிலைப் பட்டம் (BE/B.Tech) அல்லது பட்டயம் (Dilpoma in Engineering/ Technology) பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் தொழிற்சாலைகளில் உற்பத்தி (Manufacturing), பராமரிப்பு (Maintenance) அல்லது பாதுகாப்பு (Safety) துறைகளில் பணியாற்றுபவர்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு குறித்த ஆய்வு, பயிற்சி, கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அல்லது தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பான அரசு நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் இருப்பவர்கள், துறைமுகப் பணிகளில் ஏதாவதொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொழிலாளர் கல்வி நிறுவனத்திற்கான http://www.dgfasli.nic.in/welcome.html எனும் இணையதளத்தில் இப்படிப்புகளுக்கான தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை உறையின் மேல் “Application for ADIS/DIS/ PDIS 2019-2020” என்று குறிப்பிட்டு, ‘‘The Chairman, Central Committee for ADIS/DIS/PDIS Course, Central Labour Institute

தேர்வு முறை

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு மேற்காணும் இணையதளத்தில் மே/ஜூன் 2019 மாதங்களில் வெளியிடப்படும். அதன் பின்னர், அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்குப் பின்பு தொடர்புடைய மாநில இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு படிப்புக்கான சேர்க்கை அளிக்கப்படும்.  

பயிற்சிக் கட்டணம்

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்புடைய மண்டலக் கல்வி நிறுவனத்தின் பெயருக்கு (Regional Labour Institute), அந்நிறுவனம் அமைந்திருக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக பயிற்சிக் கட்டணம் ரூ.10,000-க்கான வங்கி வரைவோலையினைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் காப்புக் கட்டணமாக (Caution Deposit) ரூ.2500-க்கான வங்கி வரைவோலையும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விடுதிக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் தேர்வுக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டியிருக்கும். இப்படிப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்.

இப்பட்டயப் படிப்புகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள http://www.dgfasli.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள மண்டலத் தொழிலாளர் கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியிலிருப்பவர்கள் “The Regional Labour Institute, No.1, Sardar Patel Road, Adayar, Chennai - 600113” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 044-22350737, 22351569 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ தகவல்களைப் பெற முடியும்.

-T.S.மணி

X