ஃபேஷன் டிசைன் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

5/27/2019 3:04:21 PM

ஃபேஷன் டிசைன் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

* வழிகாட்டல்
* வேலை பெற என்ன படிக்கலாம் ?

மல்டிமீடியா துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை கடந்த இதழில் விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் டிசைன் & மீடியா கல்வித் துறையில் தொலைநோக்குப் பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க. குமார் ஃபேஷன் டிசைன் என்னும் ஆடையலங்கார வடிவமைப்பு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்…

ஆடையலங்கார வடிவமைப்பு என்றதுமே நம் நினைவுக்கு வருவது சிவப்புக் கம்பள ஆடையலங்கார கண்காட்சியில் மாடல்கள் மற்றும் பிரபலங்கள் அலங்காரமான ஆடைகளை உடுத்திக்கொண்டு ஒய்யார நடைபோடுவதாகத்தான் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி பல விஷயங்கள் இதில் உள்ளன. இது நம் அனைவருக்கும் உள்ளேயே பொதிந்துள்ள ஒரு கலை, இக்கலையே நம்மை அழகாக ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்ளும் ஒரு இயல்பினை வழங்குகின்றது. சரியான வடிவம் கொடுத்து திறமையான வாய்ப்புகளும், தகுந்த மேடையும் அமையும்போது இக்கலை மேலும் பளிச்சிடுகின்றது.

உங்கள் ஆடைகளை அழகுற தேர்ந்தெடுக்கும் ஆற்றலோடு, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகுந்த நேர்த்தியான உடைகளுக்கான ஆலோசனைகளை வழங்க துடிக்கும் நபர்களில் ஒருவரா நீங்கள்? அப்படியெனில் ஆடையலங்கார வடிவமைப்புத் துறையைத் தேர்ந்தெடுப்பதே உங்களுக்கு ஏற்ற சரியான பாதையாகும். நவீன டிரெண்டுகள், படைப்பாற்றல், விடாமுயற்சி, கலைநுட்பம் போன்றவற்றில் அதீத ஈடுபாடு கொண்டவரா? அப்படியெனில் நீங்கள் ஏற்கனவே ஆடையலங்கார வடிவமைப்பின் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வடிவமைப்புக் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள உங்களுக்கு இதுவே உகந்த தருணம்.

ஆடையலங்காரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென பல விதங்களில் வடிவமைக்கப்படும். அவற்றுள் சாதாரண ஆடைகள் (கேசுவல் வேர்), சூட்ஸ், வெளிப்புற ஆடைகள் (அவுட்டர் வேர்), விளையாட்டு ஆடைகள் (ஸ்போர்ட்ஸ் வேர்), மாலை நேரத்து ஆடைகள் (ஈவினிங் வேர்), மகப்பேறு ஆடைகள் (மெட்டர்னிட்டி வேர்), உள்ளாடைகள் (இண்டிமேட் அப்பேரல்) ஆகியவை அடங்கும்.

அதே சமயம் பெரும்பாலான மக்கள் நினைப்பது போல் ஆடைகளை விதவிதமாக உருவாக்குவது மட்டுமல்ல ஆடையலங்கார வடிவமைப்பு. இது மற்ற அணிகலன்களான கைப்பைகள் (ஹேண்ட் பேக்ஸ்), காலுறைகள் (சாக்ஸ்), டை, கழுத்துத் துண்டு (ஸ்கார்வ்ஸ்), கண்ணாடிகள் (ஐ வேர்) போன்றவற்றையும் உள்ளடக்கியது. ஆடையலங்கார வடிவமைப்பு என்பது, உலகளாவிய டிரெண்ட் மற்றும் மக்களின் தேவைகளை உள்ளடக்கிய அதிக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன் பருவநிலைகளுக்கேற்ற ஆடைகளுக்கான சரியான ஃபைபர் மற்றும் துணிகள் பற்றிய சரியான புரிதல் தரக்கூடியது.

மேற்பரப்பை அழகுபடுத்துதல், பேட்டர்ன் உருவாக்கம், நெசவு, எம்பிராய்டரி, அச்சிடுதல், தைத்தல், மற்றும் பல நுட்பங் களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பற்றிய பரந்த அறிவு.

பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள் ஃபேஷன் டிசைனில் ஏராளமான  பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் B.Sc. in Fashion Designing, B.Tech. in Fashion Technology, B.Des. in Fashion Design, B.Sc in Apparel and Fashion Design, Diploma in Fashion Retail, B.Sc. in Fashion Design and Technology, Advanced Program in Fashion, B.A (Hons.) in Fashion Design போன்றவை பிரசித்திபெற்றவை.

எதிர்காலம்

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் ஆடையலங்கார துறை தடம் பதித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை. ஆடைகள் என்பது பாதுகாப்பு அல்லது நாகரீகத்தின் அடையாளம் மட்டுமல்ல, இப்போது இது ஒரு அந்தஸ்தின் அடையாளமாகத் திகழ்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இதனால் மக்கள் உலக அளவிலான ஆடையலங்காரங்களைப் பற்றி அறிந்துகொள்வதுடன், சர்வதேச போக்கினையும் (ட்ரெண்ட்) பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் குறுநகரங்களிலும் கூட பிராண்டுகளைப்  பற்றிய விழிப்புணர்வு மற்றும் பொருட்களை வாங்கும் திறன் இரண்டும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.

ஆடையலங்காரத் துறையில் ஆரம்ப நிலையில் சராசரி ஆண்டு வருமானம்

ரூ. 2.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை உள்ள நிலையில், அதே துறையில் படிப்படியாக பணி உயர்வு பெறும்போது சராசரியாக 48 லட்சம் வரை செல்கிறது. மேலும் செல்ல செல்ல அவர்களின் வருமானத்திற்கு எல்லையே இல்லை. இவையனைத்தும் ஒரு தனி மனிதனின் திறமையினைச் சார்ந்தே அமையும். 2020ஆம் ஆண்டில், இந்தியா மின் வணிக சில்லறை வர்த்தகத்தின் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடையலங்கார மின் வணிகத்தின் மூலம் மட்டும் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜவுளித்தொழில் தற்சமயம் 108 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு 223 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வடிவமைக்கப்பட்ட ஆடைகள் துறையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) இந்தியாவில் 40% எனவும், 2020ஆம் ஆண்டில் இது 11,000 கோடியை தாண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களான அர்விந்த் குரூப், மெஜூரா ஃபேஷன் & லைஃப் ஸ்டைல், ரேமண்ட் அப்பேரல், ட்ரெண்ட் ரீடெய்ல் மற்றும் ஃபியூச்சர் குரூப் போன்றவை தங்களது எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியாக தங்களது சொந்த பெயரிலேயே ஆடை வடிவமைப்பு பிராண்டுகளை வெளியிடுகின்றன. சர்வதேச நிறுவனங்களான Zodiac, Zara, Calvin Klein, Benetton, Diesel, Tommy Hilfiger போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் ஒரு நிரந்தரமான விற்பனை வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

உலகத்தில் உள்ள மற்ற ஆடையலங்கார தலைநகர்களைப் போல, இந்தியாவிலும் பருவநிலைகளுக்கேற்ற ஆடையலங்கார கண்காட்சிகள் நடைபெற்று மக்களுக்கு ஆடையலங்காரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதைப்பற்றிய புரிதலை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது.

வேலைவாய்ப்புகள்

இத்துறையை தேர்வு செய்து படித்து பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், ஃபேஷன் டிசைனர்,  ஃபேஷன் ஸ்டைலிஸ்ட், ஃபேஷன் ரீடைலர், காஸ்ட்யூம் டிசைனர், ஃபேஷன் கன்சல்டன்ட், ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர், என்டர்ப்ரனர், ஃபேஷன் இல்லஸ்ட்ரேட்டர், ஃபேஷன் ஜர்னலிஸ்ட், ஃபேஷன் அகாடமீசியன், ஃபேஷன் மெர்ச்சன்டைசர், விஷ்வல் மெர்ச்சன்டைசர், ஃபேஷன் பையர், ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட், எம்ப்ராய்டரி எக்ஸ்பர்ட், பிரின்ட் எக்ஸ்பர்ட், டெக்ஸ்டைல் டிசைனர் போன்ற தரமான வேறு பல வேலைவாய்ப்புகள் எண்ணற்ற அளவில் உள்ளன.

ஆடையலங்கார வடிவமைப்பாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ள பகுதிகள்

* சில்லறை வர்த்தக நிறுவனங்கள்  (ரீடெய்ல் கம்பெனிகள்)
* ஆடையலங்கார வடிவமைப்பு கடைகள் (பொட்டிக்ஸ்)
* கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகள்
* ஏற்றுமதி நிறுவனங்கள்
* ஆடையலங்கார கண்காட்சிகள்
* உள்நாட்டு ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கான பிராண்டுகள்
* ஆடம்பர வடிவமைப்பு ஸ்தாபனங்கள்

நாம் ஏன் இத்துறைப்படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்?

வணிகம், கலை மற்றும் வடிவமைப்புத் திறன் இணைந்தது. புதுமையான, திறமையான சிந்தனைகளுக்கான வாய்ப்பு கொண்டது. எப்போதும் தேவை உள்ள ஒரு வேலை வாய்ப்பு தரக்கூடியது. சுயதொழில் அல்லது பிரபல நிறுவனங்களில் பணி செய்ய அதிக வாய்ப்பு கொண்டது. உலகம் முழுவதிலும் உள்ள உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கொண்டது. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் துறை. அடுத்த அத்தியாயத்தில் Graphic Design படிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.

- தோ.திருத்துவராஜ்

X