விஷுவல் மீடியா படிப்பும் வேலைவாய்ப்புகளும்!

6/24/2019 4:38:33 PM

 விஷுவல் மீடியா படிப்பும் வேலைவாய்ப்புகளும்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

* வேலைவாய்ப்பு பெற என்ன படிக்கலாம் ?

கிராபிக் டிசைன் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புகளுக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை கடந்த இதழில் விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் விஷுவல் மீடியா என்னும் காட்சி ஊடகம் பற்றிய படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து டிசைன் & மீடியா கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் கொடுக்கும் தகவல்களைப் பார்ப்போம்…

கருத்துகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு, எண்ணங்கள் மற்றும் பிற தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பார்வையாளர்கள் பார்க்கவும் மற்றும் தொடரவும் உருவாக்கப்பட்ட ஒரு மேடையே காட்சி ஊடகம் எனப்படும் விஷுவல் மீடியா ஆகும். எந்த ஒரு விஷயத்தையும் குறுகிய காலத்தில் எவருடனும்  தொடர்புகொள்ளும், சக்திவாய்ந்த ஊடகமே ‘காட்சி ஊடகம்’ ஆகும். இதன் சிறகுகள் பரந்து விரிந்து, பொழுதுபோக்கு முதல் கல்வி வரையிலான வேறுபட்ட துறைகளிலும் கால்பதித்து நிற்கிறது.

வடிவமைப்பு உலகம், மோஷன் கிராபிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல் வீடியோ உருவாக்கம், டிஜிட்டல் ஆர்ட், இமேஜிங் மற்றும் மல்டிமீடியா போன்றவற்றிற்கு இக்காட்சி ஊடகமானது வழிகொடுக்கிறது. பெயருக்கேற்றார்போல், இந்த ஊடகமானது நம்மை காட்சியின் மூலம் அனுபவிக்க வைக்கிறது. அதாவது, நம் கண்களால் காண்பதின் மூலம் யாவற்றையும்  தொடர்புபடுத்துவதே காட்சி ஊடகத்தின் ஒரு பங்காகும். இது, டிஜிட்டல் மற்றும் அச்சிட்ட படங்கள், நிழற்படம், வரைகலை வடிவமைப்புகள், டிஜிட்டல் வெளியீடு, ஆடையலங்காரம், காணொளி/வீடியோக்கள், விளையாட்டு, கட்டடக்கலை, கட்டமைப்புகள், நுண்கலைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.

காட்சி ஊடகமானது நம் வாழ்க்கை சூழலோடு இரண்டறக் கலந்துவிட்டது. அதாவது, விளம்பர பலகைகள், ஸ்மார்ட் போன்கள், செய்தித்தாள்கள், ஸ்கிரீன் ப்ரொஜெக்டர்கள், சுவரொட்டிகள், தொலைக்காட்சி, கணினி மற்றும் வேறு பல ஊடகங்கள் மற்றும் சாதனங்கள் போன்ற அன்றாட பயன்பாட்டில் தவிர்க்க முடியாததாக உள்ளது. விஷுவல் மீடியாவானது விளம்பரங்கள், வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட நுண்கலைகள், பொருட்கள் வடிவமைப்பு, பொறியியல் படிப்பு, தொழில்நுட்ப துறை, விளக்கக் காட்சிகள், பயிற்சி வழிகாட்டிகள், காட்சி வழிமுறைகளை நம்பியிருக்கும் கட்டடக்கலை, காட்சி உணர்வுகளை நம்பியிருக்கும் ஆடையலங்கார துறை என பலவற்றிலும் அங்கம் வகிக்கிறது.

காட்சி ஊடகமானது தகவல்களைப் பரப்புவதில் புரட்சி செய்யும் வல்லமை படைத்த ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் ஆகும். மேலும் இது, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வது, அரசியல் பிரசாரங்கள், கல்வியினை நோக்கி மாணவர்களை ஈர்ப்பது, பார்வையாளர்களை மகிழ்விப்பது போன்றவற்றை பயனுள்ள முறையில் செய்கிறது. ஐ.நா. சபையின் ‘‘உலக உணவுத் திட்டம்’’ பற்றிய பிரசாரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் விஷுவல் மீடியா மிகப்பெரும் பங்காற்றியது. உதாரணத்திற்கு கீழ்க்கண்ட படத்தை பாருங்கள், மேலும் உற்றுப்பாருங்கள்… பஞ்சம், பட்டினியை சித்தரித்து, உணவுப்பொருளை வீணாக்காதீர்கள் என இதைவிட அழகாகவும், ஆழமாகவும்  எப்படிச் சொல்வது?

உலகெங்கிலுமிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிதி வசூலிப்பதில் இந்த விஷுவல் மீடியா பிரசாரம் அதிக உதவிபுரிந்துள்ளது.கீழ்க்கண்ட ஆய்வுத் தகவல்கள் மூலம், ஊடகங்களில் காட்சி ஊடகம் ஏன் முக்கியம் என நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

* தோராயமாக 65% மக்கள் காட்சியின் மூலமே கற்கிறார்கள்
* மனித மூளையானது எழுத்துகளைத் தொடர்புபடுத்துவதை விட காட்சித் தகவல்களை 60000 மடங்கு வேகத்துடன் தொடர்புபடுத்துகிறது.
* நம் மூளைக்கு வரும் தகவல்களில் 90% தகவல்கள் காட்சித் தகவல்களே
* நம் மூளையோடு தொடர்புடைய நரம்பு இழைகளில் 40% நம் கண்களில் உள்ள ரெட்டினா  எனப்படும் விழித்திரையோடு இணைக்கப்பட்டுள்ளது.

இத்துறையில் சிறந்து விளங்கிட தேவைப்படும் முக்கிய திறன்கள்

* தகவல் தொடர்பு திறன்
* புரிதல் திறன்
* புதுமையான சிந்தனை
* காட்சி எழுத்தறிவு
* சிக்கல்களை தீர்க்கும் திறன்
* தேவையான மென்பொருள் மற்றும் கருவிகளை உபயோகிக்கும் தொழில்நுட்ப திறன்
* ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்
* கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் அறிவினை மேம்படுத்தும் திறன் எதிர்காலம்

இந்தியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செய்தித்தாள்களும் மற்றும் வெளிநாட்டு சேட்டிலைட் தொலைக்காட்சி சேனல்கள், உள்நாட்டு சேட்டிலைட் சேனல்கள் என 800-க்கும் மேற்பட்டவை ஒளிபரப்பாகின்றன. மேலும் உலகத்திலேயே 100 மில்லியன் பிரதிகள் தினந்தோறும் விற்பனையாகும் மிகப்பெரும் செய்தித்தாள் சந்தை உள்ள நாடு இந்தியா. பாகுபலி படத்தின் காட்சித்திறமையானது, இந்தியாவின் அழகிய தயாரிப்பு திறமைகளின் மூலம் உலக நாடுகளை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. மேலும் இது இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சர்வதேச வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது. இந்திய சினிமாத் துறையானது இந்த 2019ஆம் ஆண்டிலேயே 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களுக்கான சந்தாதாரர்கள் அதிவேகமாக வளர்ந்து வருகிறார்கள். மேலும் 2010ஆம் ஆண்டில் 106 மில்லியனாக இருந்த இச்சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டிலேயே 187 மில்லியனை நெருங்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 16.4% எனவும், 2014ஆம் ஆண்டில் 744 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இதன் மதிப்பு இந்த 2019ஆம் ஆண்டில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மேலும் வடஅமெரிக்கா அல்லாத பிற உலக நாடுகள் வரிசையில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 14.3% ஆகும். மேலும், இது வரும் 2020ஆம் ஆண்டில் 33.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மேலும் சில துறைகளின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதங்களை (Compound annual growth rate - CAGR) கீழே காணலாம்.

* விளம்பரத்துறை   - 15.9%
* வானொலி         - 16.9%
* டிஜிட்டல் ஊடகம் - 33.5%
* தொலைக்காட்சி    - 15.0%
* அச்சு ஊடகம்       - 08.6%

வழங்கப்படும் படிப்புகள் :

B.Sc. in Visual Communication, B.Sc. in Visual Media, BA in Visual Communication, Diploma in Visual Communication, Bachelor of Design in Visual Communication, Certificate course in Visual Communication, BVC (Bachelor of Visual Communication), Bachelor of Fine Arts in Visual Media (Eligibility: +2).

வேலைவாய்ப்புகள்

இப்படிப்பில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், கீழ்க்கண்ட எந்தவொரு துறையிலும், சேர்ந்து பணியாற்றலாம்.

விளம்பரத்துறை: ஆர்ட் டைரக்டர், டைப்போகிராபர், விஷவல் ஆர்ட்டிஸ்ட், போட்டோகிராபர், இல்லஸ்ட்ரேட்டர், காப்பி ரைட்டர், அக்கவுண்ட் மேனேஜர், ஆட். ஃபிலிம் மேக்கர் மற்றும் பல.

ஒளிபரப்பு ஊடகம்: டெலிவிஷன் & ஃபிலிம் ஸ்கிரிப்ட் ரைட்டர், டைரக்டர், சினிமாட்டோகிராபர், போஸ்ட் புரொடக்‌ஷன் டெக்னீஷியன், ப்ரெசென்ட்டர் மற்றும் பல.

டிஜிட்டல் ஊடகம்: வெப் டிசைனர், கிராபிக் டிசைனர், இல்லஸ்ட்ரேட்டர், UI/UX டிசைனர், அனிமேட்டர், கேம் டிசைனர், சோஷியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட், ப்லாக்கர், மீடியா ப்ரோக்ராமர் மற்றும் பல.

அச்சுத்துறை: பப்ளிஷிங் ஸ்பெஷலிஸ்ட், கிராபிக் டிசைனர், போட்டோகிராபர், ரைட்டர் மற்றும் பல.

விருப்பமுள்ள ஏதேனும் துறை: கன்சல்டன்ட் அல்லது ஃபிரீலான்சர் போன்ற நம்பிக்கைக்குரிய வேறு பல வேலைவாய்ப்புகள் எண்ணற்ற அளவில் உள்ளன.

நாம் ஏன் இத்துறை படிப்பை  தேர்ந்தெடுக்க வேண்டும்?

பின்வரும் காரணங்களால் இத்தொழில் மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றம் பெறுகிறது.

* உங்களின் பேரார்வமிக்க துறையிலிருந்துகொண்டே சமூக பொறுப்புடன் பணியாற்றும் வாய்ப்பு
* எந்தவொரு தொழிலின் முன்னேற்றத்திற்கும் முக்கிய கருவி நீங்களே
* பல்வேறு விதமான கலாசாரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு
* உலக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு
* உயர்ந்த படைப்பு மற்றும் அதிக திருப்திகரமான பணி
* பொதுத்துறை, தனியார் துறை மற்றும் சுயதொழில் போன்ற எந்தப் பிரிவிலும், கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள்
* சலிப்பற்ற வேலை

எத்தொழிலும் மாற்றத்தினை உருவாக்கும் வாய்ப்புடன், சலிப்பற்ற வகையிலான தனித்தன்மை வாய்ந்த ஒரு சிறந்த தொழில்துறையைத் தேடும் ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே!
 
அடுத்த அத்தியாயத்தில் Interior Design படிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.

- தோ.திருத்துவராஜ்

X