ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தகுதி மதிப்பெண் அதிகரிப்பு!

7/8/2019 5:25:24 PM

ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தகுதி மதிப்பெண் அதிகரிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆசிரியர் பயிற்சிப் படிப்புப் பள்ளிகளை கவனித்து வருகிறது. இந்த நிலையில் தரமான ஆசிரியர்களை உருவாக்கும் விதமாக ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளில் சேருவதற்கு தகுதி மதிப்பெண்ணை அதிகரித்து அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பயிற்சி பள்ளிகளில் சேருவதற்கு முன்பெல்லாம் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

ஆனால், புதிய உத்தரவுப்படி, குறைந்தது 45 சதவீதம் தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், பொதுப்பிரிவினர் 50 சதவீதம் தகுதி மதிப்பெண் பெறவேண்டும். பி.சி. மற்றும் எம்.பி.சி. பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே உள்ள 45 சதவீத தகுதி மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளில் சேரலாம்.

இந்த நடைமுறை நடப்பு கல்வி ஆண்டிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாகவே பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.

எனவே, 30 சதவீதத்துக்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள பயிற்சி நிறுவனங்களில் 2020-21-ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X