சைபர் செக்யூரிட்டி மற்றும் சைபர் சட்டப் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

8/19/2019 3:45:24 PM

சைபர் செக்யூரிட்டி மற்றும் சைபர் சட்டப் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

*வழிகாட்டல்

முழுக்க முழுக்க கணினியால் கட்டமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப உலகத்தில்தான் தற்போது நாம் வாழ்ந்துவருகிறோம். கணினியின் மவுஸை தட்டினால் போதும் அனைத்து சேவைகளும் வீட்டுக் கதவை தட்டுகின்றன. மேம்படுத்தப்பட்ட மென்பொருள் (Software) மற்றும் வன்பொருள்களின் (Hardware) பயன்கள் தொழில்நுட்ப உலகில் புது உச்சத்தையும், துல்லியத்தன்மையையும் பறைசாற்றிவருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமாக விளங்குகிறது தகவல் தொழில்நுட்பத்துறை (Information Technogy-IT).

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறைகள் இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகின்றன என்பது ஒருபுறம் இருந்தாலும் நிர்வாகம், தொழில் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மற்ற துறைகளின் வளர்ச்சிக்கும் அடிநாதமாக விளங்குகிறது. இந்திய பெருநகரங்களில் செயல்பட்டுவரும் பல ஸ்டார்ட்-அப் கம்பெனிகளுக்கும் அடித்தளமாக விளங்குகிறது தகவல் தொழில்நுடபத் துறைகள். இவ்வாறு இன்றைய டிஜிட்டல் உலகில் அதிமுக்கியமாகிப்போன தகவல் அமைப்புகளின் (Information Systems-IS) பாதுகாப்பிற்கு அனைத்து நிறுவனங்களும் முன்னுரிமை அளித்துவருகின்றன. ஏனெனில் இன்றைய இணைய உலகில் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நிறுவனம் சார்ந்த மற்றும் தனிமனித தகவல்களை திருட நூறு சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.

புதுப் புது வழிகளிலும், கணிக்கவே இயலாத முறையிலும் பல்வேறு இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஒவ்வொரு நிமிடமும் வந்துகொண்டிருக்கின்றன என்பதும் நிதர்சனமான உண்மை. இவ்வாறு வரும் அச்சுறுத்தல்களின் வேர்களைக் கண்டுபிடிப்பதும், கட்டுப்படுத்துவதும் எங்களைப் போன்ற சைபர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளன என்கிறது அமெரிக்காவில் இயங்கிவரும் Symentec எனும் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனம். இதுபோன்ற சூழலில்தான் சைபர் செக்யூரிட்டி சார்ந்த படிப்புகளின் தேவை அவசியமாகிறது. இணையவழியில் நடக்கும் குற்றங்கள், தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் சட்டங்கள் குறித்த அறிவியல் மற்றும் தொழிநுட்பப் படிப்புகளே சைபர் செக்யூரிட்டி மற்றும் சைபர் சட்டங்கள் சார்ந்த படிப்புகளாகும்.

கல்வித் தகுதி

சைபர் செக்யூரிட்டி சார்ந்த பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகள், முதுகலை பட்டயப் படிப்பு, குறுகிய காலப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை இந்திய அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இளங்கலை படிப்புகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் +2 முடித்தவர்களும், முதுகலை பட்டப்படிப்பிற்கு இளங்கலைப் பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்புகள்

உலகமே கணினிமயமாகி இணையத்தோடே வாழ்க்கை பயணிப்பதால் சைபர் செக்யூரிட்டி துறையின் தேவை அத்தியாவசியமாகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறைகள், தொழில்துறைகள், வங்கிப் பணிகள் என அனைத்துத் துறைகளிலும் சைபர் செக்யூரிட்டி துறையின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. 2020ம் ஆண்டு வாக்கில், சைபர் செக்யூரிட்டி துறையில் தொழில்முறை பயிற்சி பெற்ற சுமார் ஒரு மில்லியன் நபர்கள் இந்தியாவிற்குத் தேவைப்படுவார்கள் எனக் கூறுகிறது NASSCOM (The National Association of Software & Service Companies)-ன் சமீபத்திய ஆய்வு. எனவே, சைபர் செக்யூரிட்டி படித்தவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

தகவல்கள் திருடப்படுவதையும், சட்டவிரோதமான அமைப்புகளின் இணைய தாக்குதல்களையும் பாது காக்கும் Security Specialist, இணைய குற்றங்கள் மற்றும் தகவல்கள் திருட்டை துப்பறியும் Cyber Detective, பல்வேறு திட்டங்கள் மூலம் தகவல் திருட்டை தடுக்கும் Security Engineer, அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை என்கிரிஃப்ட் செய்யும் Cryptographer, எந்த அமைப்பிற்குள்ளும் ஊடுருவும் திறன் பெற்ற Ethical Hacker, அரசின் சட்ட அமலாக்கத் துறையில் பணியாற்றும் Computer Forensic Scientist மேலும் Source Code Auditor, Security Architect, Security Analyst, Vulnerability Accessor எனப் பல்வேறு பதவிகளில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சைபர் செக்யூரிட்டி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன.

கல்வி நிறுவனங்கள்

இந்தியாவின் பல்வேறு முன்னணி அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள் சைபர் செக்யூரிட்டி மற்றும் சைபர் சட்டங்கள் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்…
Bachelor of Technology [B.Tech] (Cyber Security) - Graphic Era University, Dehradun
Bachelor of Technology [B.Tech] (Cyber Security)- BITS, Hyderabad
Bachelor of Technology [B.Tech] (Cyber Security)- Ganpat University Institute of Computer Technology - [ICT], Ahmedabad
M.Tech - Cyber Law and Information Security (2 Years) - IIT Alahabad
M.Tech Information Security (2 Years) IIT Delhi
Integrated M.E (Computer Science) with Information Security as Specialization NITS Pilani
Diploma in Cyber Law (6 Months) - Asian School of Cyber Laws
Programe in Internet Crime Investigate (6 Months) - Asian School of Cyber Laws
PG Diploma in Cyber Law (1 Year) Nalsar University of Law
PG Diploma in Cyber Law (1 Year) Uttarakhand Open University
PG Diploma in Criminal Justice and Forensic Science (1 Year) University of Hyderabad

- வெங்கட் குருசாமி

X