நியூட்ரிஷன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

10/21/2019 5:00:51 PM

நியூட்ரிஷன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

வழிகாட்டல்

இந்தியாவில் தாராளமயமாக்கல் 90- களில் அமல்படுத்தப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், மேற்கத்திய உணவுகள், உடைகள் என அன்றுமுதல்  நம் வாழ்க்கைமுறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. நவீன பொருளாதாரமும் அதீத நுகர்வையே கோருகின்றன. இவற்றால் நாம் நேர்மறையான  பயன்களைப் பெற்றாலும் பல எதிர்மறையான விளைவுகளும் உள்ளன. குறிப்பாக உணவுப் பழக்கத்தில் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம்.

நவீன மேற்கத்திய உணவுவகைகள், நில அமைப்பு சார்ந்து உண்டு வாழ்ந்த இந்தியர்களின் உடல்நிலையை மாற்றத்துக்குள்ளாக்கியது. சூழல் சாராத ஒவ்வாத  உணவுகளினால் சரியான நுண்ணூட்டங்கள் கிடைக்காமல் சிறுவயதிலேயே கண்ணாடி போடும் நிலை, உடல்பருமனாகும் நிலை என விதவிதமான நோய்களால்  நகர்ப்புற இந்தியர்கள் பாதிப்படைகிறார்கள். குழந்தைகளுக்கு நுண்ணூட்டமிக்க உணவு அவசியம்.

வளர வளர அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குவது பெற்றோர்கள் மற்றும் அரசின் கடமை. இங்குதான் நியூட்ரிஷன் சார்ந்த படிப்புகளின் தேவை  அவசியமாகிறது. உடல் அமைப்பு ஊட்டச்சத்துகள், உணவுவகைகள் சார்ந்த அறிவியல் படிப்பே நியூட்ரிஷன் படிப்புகளாகும். உடல்வகை, உடல் அமைப்பைக்  கணக்கில் கொண்டு சரியான உணவுகளைப் பரிந்துரைத்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ள செய்வதே நியூட்ரிஷியன் கடமையாகும்.

நகர்ப்புற குழந்தைகள் நவீன மேற்கத்திய உணவுவகைகளினால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் வறுமை, கல்வி அறிவின்மை, சுகாதாரமின்மை ஊட்டச்சத்துமிக்க  உணவுகள் கிடைக்காதது என இந்திய கிராமப்புற குழந்தைகளும் கஷ்டப்படுகின்றனர். ஐநா உட்பட பல நிறுவனங்களின் ஆய்வும் இதை உறுதிசெய்துள்ளன. அதன்  காரணமாகவே, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது. இந்தியாவின் இத்தைகைய சூழலில் தனியார் மற்றும் அரசுத் துறைகளில்  ஊட்டச்சத்து நிபுணரின் தேவை இன்றியமையாததாகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

சத்தான, ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்ற வழிகாட்டும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் பல கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. அந்த  வகையில் மூன்று வருட இளங்கலைப் படிப்புகளான B.Sc. in Nutrition and Dietetics, B.Sc. in Home Sciences, இரண்டு வருட  முதுகலைப் படிப்புகளான M.Sc. in Nutrition and Dietetics, M.Sc. in Home Sciences மற்றும் Post  Graduate in  Nutrition and Dietetics போன்ற படிப்புகளை இந்தியாவின் முன்னணி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. மேலும்   நியூட்ரிஷன் சார்ந்த பல உட்துறைகளிலும் (Specialization) ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

டிப்ளமோ படிப்புகள்: டிப்ளமோ இன் நியூட்ரிஷன் அண்ட் ஹெல்த் எஜுகேஷன், டிப்ளமோ இன் டயட்டீட்டிக்ஸ், டிப்ளமோ இன் நியூட்ரிஷன் மற்றும்  டயட்டீட்டிக்ஸ், டிப்ளமோ இன் ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன், டிப்ளமோ இன் டயட்டீட்டிக்ஸ் அண்ட் கிளினிக்கல் நியூட்ரிஷன், டிப்ளமோ இன் நியூட்ரிஷன்  அண்ட் ஃபுட் டெக்னாலஜி, இந்த வகையான படிப்புகள் 6 மாதம் முதல் 3 வருடம் வரை பயிற்றுவிக்கப்படுகின்றன. டிப்ளமோ இன் டயட்டிக்ஸ், ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன் போன்ற படிப்புகளில் எடை பராமரிப்பு, உணவுப் பராமரிப்பு போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.

பட்டப்படிப்புகள்: பி.எஸ்சி., கிளினிக்கல் நியூட்ரிஷன், பி.எஸ்சி., நியூட்ரிஷன் மற்றும் டயட்டீட்டிக்ஸ், பி.எஸ்சி., ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன், பி.எஸ்சி.,  அப்ளைடு நியூட்ரிஷன், பி.எஸ்சி., டயட்டீக்ஸ். பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ்.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்: கிளினிக்கல் நியூட்ரிஷன், பிடீயாட்ரிக் நியூட்ரிஷன், பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷன், ஃபுட் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, ஸ்போர்ட்ஸ்  நியூட்ரிஷன், டயட்டீட்டிக்ஸ் ஜெரண்டாலஜிக்கல் நியூட்ரிஷன் ரெனால் நியூட்ரிஷன்.

கல்வித் தகுதி

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுத்து +2 முடித்த மாணவர்கள் இளங்கலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு   விண்ணப்பிக்கலாம். குறிப்பாக உயிரியல் துறைகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் உடல் அமைப்பைப் பற்றி +2-வில் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுவதால்  உயர்கல்வியில் அவை பெரிதும் உதவுகின்றன. ஏனெனில் உடல் அமைப்புகளும், உடலியக்கங்களும்தான் நியூட்ரிஷன் படிப்புகளின் அடிப்படை. முதுகலை மற்றும்  ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு இளங்கலைப் படிப்புகளே கல்வித் தகுதி. மேலும் நியூட்ரிஷன் சார்ந்த பல உட்துறைகளைத் தேர்ந்தெடுத்தும் ஆய்வுப் படிப்புகளை  மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு

அதிகரித்துவரும் ஹெல்த் கிளினிக்குகள், ஃபிட்னஸ் சென்டர்கள் மற்றும் நவீன உணவுவகைகளால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பரீசலிக்கும்  தொழில்முறை பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களின் தேவை இன்றைய சூழலில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவம், விளையாட்டு, உணவு எனப்  பல்வேறு துறைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது. Nestle, Cadbury’s, unilever போன்ற கார்ப்பரேட்  நிறுவனங்களில் ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் மெடிக்கல் மார்க்கெட்டிங் துறைகளில் ஊட்டச்சத்துநிபுணர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

சமூகநல மேம்பாடு மற்றும் பொது சுகாதாரத் துறைகள் என அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது. அரசின் Food & Nutrition Board  (FNB)-க்கு, யு.பி.எஸ்.சி தேர்வுகள் மூலம் நியூட்ரிஷன்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுபோக Clinical Nutritionist, Food Service  Nutritionist, Sports Nutritionist என பல தளங்களிலும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேவை அதிகரித்துவருகிறது.

கல்வி நிறுவனங்கள்

இந்தியாவின் பல முன்னணி அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள் நியூட்ரிஷன் சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கிவருகின்றன. அவற்றில் சிலவற்றைப்  பார்ப்போம். Lady Irwin College, University of Delhi, New Delhi /Institute of Home Economics, University of  Delhi, New Delhi /Woman’s Christian College, University of Madras, Chennai/SNDT Women’s University,  Mumbai / National Institute of Nutrition, Hydrabad /JD Birla Institute, kolkata /University of Mysore,  Mysore. மாறிவரும் வாழ்க்கைமுறையில் உணவுமுறையின் மாற்றத்தை சரிசெய்து சரிவிகித உணவை திட்டமிட்டால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வு  சாத்தியமாகும். இன்னும் எதிர்வரும் காலங்களில் நிச்சயம் நியூட்ரிஷியனின் வழிகாட்டுதல் அவசியம் என்ற சூழ்நிலையே உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

-வெங்கட் குருசாமி

X